ரசிகர்களால் ‘தல’ என அன்புடன் அழைக்கப்படும் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தோனி, 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின் அவ்வணியில் மீண்டும் விளையாடுவாரா அல்லது வழிகாட்டியாகவோ, பயிற்சியாளராகவோ அணியில் நீடிப்பாரா என்ற தகவல் ஏதும் இல்லை. ஆனால் ஏதேனும் ஒருவகையில் அணியில் நீடிப்பார் என்ற எதிர்பார்ப்பு தற்போதுவரை இருக்கிறது.
என்றாலும், அடுத்த சீசனில் தோனி விளையாட வேண்டுமானால், பிசிசிஐயின் முடிவுக்கு நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் மெகா ஏலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன் ஒவ்வோர் அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். எனினும், சில ஐபிஎல் அணிகள் கூடுதல் வீரர்களை தக்கவைக்க அனுமதிக்க வேண்டும் என பிசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளன. பிசிசிஐ 5 வீரர்கள்வரை தக்கவைக்க அனுமதி அளிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேளை, ஓர் அணி 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என பிசிசிஐ அறிவித்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதிஷா பதிரானா ஆகிய நான்கு வீரர்களை மட்டுமே அந்த அணி தக்க வைக்கும். தோனியை அந்த அணி தக்க வைக்காது என கூறப்படுகிறது. இதனால் தோனி, 2025இல் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தனக்குப் பிடித்த ஃபேவரைட் பவுலர் ஜஸ்பிரித் பும்ராதான் என தோனி சொல்லியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனியிடம், “தற்போதைய பந்துவீச்சாளர்களில் யாரை மிகவும் பிடிக்கும்” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த தோனி, “தற்போதைய காலகட்டத்தில் மிகவும் பிடித்த பவுலர் என்றால், எனக்கு அது இந்திய அணியின் பும்ராதான். தவிர, என்னைவிட இந்திய கிரிக்கெட் அணியில் பும்ராவின் பங்களிப்பு அதிகம்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.