தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டி.என்.பி.எல் தொடர் 6 சீசன்களை கடந்த பிறகு, முதல்முறையாக கடந்தாண்டு ‘ஏலத்தின் மூலம் வீரர்களை எடுக்கும் முறை’ அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 8வது டி.என்.பி.எல் சீசனானது வரும் ஜூன் -ஜூலை மாதங்களில் நடைபெறவிருக்கிறது. இதற்காக 8 அணிகள் வீரர்களின் ஏலத்துக்கான போட்டியில் களம்கண்டன.
இந்நிலையில் 8வது சீசனுக்கான வீரர்கள் ஏலமானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய வீரர்கள் ஏலமானது, சாய் கிஷோரின் முதல் ஏலத்திலிருந்தே களைகட்டியது. முதல் ஏலத்திலேயே டிஎன்பிஎல் வரலாற்றில் முதல்முறையாக அதிக விலைக்கு சென்று பிரமிக்கவைத்தார் சாய் கிஷோர்.
நடப்பாண்டு டிஎன்பிஎல் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன், ஐபிஎல் நட்சத்திரங்களான சாய் கிஷோர் மற்றும் சந்தீப் வாரியர் போன்ற வீரர்கள் அதிக விலைக்கு செல்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஐபிஎல் தொடரில் இருக்கும் அணிகள் டிஎன்பிஎல் தொடரையும், அதில் சிறப்பாக செயல்படும் வீரர்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் நிலையில் டிஎன்பிஎல் தமிழ்நாடு வீரர்களுக்கு முக்கியமான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. எதிர்ப்பார்த்த வீரர்களை தாண்டியும் ஹரிஸ் குமார், அபிஷேக் தன்வார் முதலிய வீரர்களும் ஏலத்தில் பெரிய போட்டியை ஏற்படுத்தினர்.
முதல் வீரராக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் பெயர் ஏலத்தில் கூறப்பட்டது. எதிர்பார்த்தைப் போலவே அவரை ஏலம் எடுக்க அனைத்து அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அவரை டி.என்.பி.எல் வரலாற்றில் அதிகபட்ச தொகையான ரூ. 22 லட்சத்திற்கு திருப்பூர் தமிழன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சாய் கிஷோர் ரஞ்சி தொடரிலும் கலக்கிவருகிறார். முதல் தர கிரிக்கெட்டில் அவர் 140 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சாய் கிஷோர்தான் அதிகவிலைக்கு சென்றார் என நினைத்த நேரத்தில், சிறிது நேரத்திலேயே சஞ்சய் யாதவை திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி ரூ.22 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் இந்த இருபெரும் ஏலங்களை தாண்டியும் டிஎன்பிஎல் ஆக்ஷன் கலைக்கட்டியது.
நடராஜன் அதிகவிலைக்கு செல்வார் என நினைத்ததை போலவே ரூ.11.25 லட்சம் தொகைக்கு திருப்பூர் தமிழன்ஸ் கைப்பற்றியது. 47 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் நடராஜனின் கம்பேக் பல்வேறு தமிழ்நாடு ரசிகர்களால் ஐபிஎல்லில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கு சரியான பிள்ளையார் சுழியாக டிஎன்பிஎல் அவருக்கு அமையவுள்ளது.
யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 34 வயதான ஹரிஷ் குமார், 15.4 லட்சம் ஏலத்திற்கு சென்று பிரமிக்கவைத்தார். அவரை சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி தட்டிச்சென்றது. அவருக்கு அடுத்ததாக அபிஷேக் தன்வாரை ரூ.12.2 லட்சம் ஏலத்துக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், 11 லட்சத்துக்கு விவேக்கை சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும் தட்டிச்சென்றன. சந்தீப் வாரியர், மோகித் ஹரிஹரன் போன்ற வீரர்கள் 10 லட்சம் விலைக்கு சென்றனர்.
சாய் கிஷோர் - ரூ.22 லட்சம் - திருப்பூர் தமிழன்ஸ்
சஞ்சய் யாதவ் - ரூ.22 லட்சம் - திருச்சி கிராண்ட் சோழர்கள்
ஹரிஷ் குமார் - ரூ. 15.4 லட்சம் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ்
அபிஷேக் தன்வார் - ரூ.12.2 லட்சம் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
டி.நடராஜன் - ரூ.11.25 லட்சம் - திருப்பூர் தமிழன்ஸ்
விவேக் - ரூ.11 லட்சம் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ்
சந்தீப் வாரியர் - ரூ. 10.5 லட்சம் - திண்டுக்கல் டிரகன்ஸ்
மோகித் ஹரிகரன் - ரூ. 10.2 லட்சம் - நெல்லை ராயல் கிங்ஸ்
ஜி.பெரியசாமி - ரூ.8.8 லட்சம் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
பொய்யாமொழி எம் - ரூ.7.25 லட்சம் - சேலம் ஸ்பார்டன்ஸ்
அர்ஜுன் பி மூர்த்தி - ரூ.7.25 லட்சம் - திருச்சி கிராண்ட் சோழர்கள்
சதுர்வேட் என் எஸ் - ரூ.6 லட்சம் - மதுரை பாந்தர்ஸ்
சசிதேவ் யு - ரூ.5.20 லட்சம் - மதுரை பாந்தர்ஸ்
சிலம்பரசன் ஆர் - ரூ.5 லட்சம் - நெல்லை ராயல் கிங்ஸ்