AB DE Villiers Twitter
கிரிக்கெட்

“ஒருவேளை மீண்டும் களத்திற்கு வந்தால் SKY, கோலிக்கு போட்டியாக இருக்க விரும்புகிறேன்” - டி வில்லியர்ஸ்

“மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்பினால், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருக்கும் போட்டியாக இருக்க விரும்புகிறேன்” என்று முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

Rishan Vengai

நினைத்த நேரத்தில் மைதானத்தின் எந்த இடத்துக்கும் பந்தை வீசி அடிக்கக்கூடிய வீரராக திகழ்ந்த ஏபிடி வில்லியர்ஸ், 360 டிகிரி பேட்டர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுவதுண்டு. நவீன சகாப்தத்தின் தலைசிறந்த பேட்டர்களில் ஒருவராக பார்க்கப்படும் இவர், ஆடுகளத்தில் தனது புத்திசாலித்தனமான ஸ்ட்ரோக்பிளே திறமையால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தக்கூடியவர்.

AB DE Villiers

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான இவர், மே 2018ஆம் ஆண்டு தனது 34 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் கிரிக்கெட்டில் நீங்கள் கம்பேக் கொடுப்பீர்களா என அவரிடம் சமீபத்தில் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்திருக்கும் அவர், “திரும்ப வந்தால் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருக்கும் போட்டியாக இருக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

"எப்போதும் சிறந்த வீரராக இருக்கவே விரும்பினேன்!"

ஜியோ சினிமாவில் ஹோம் ஆஃப் ஹீரோஸ் நிகழ்ச்சியில் ராபின் உத்தப்பாவோடு உரையாடிய டி வில்லியர்ஸ், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது ‘எதற்காக ஓய்வை அறிவித்தீர்கள்? மீண்டும் களத்திற்கு வந்து விளையாட வாய்ப்பிருக்கிறதா?’ என்று கேட்கப்பட்டது.

ab de villiers

அதற்கு பதிலளித்து பேசிய அவர், “கண்டிப்பாக. என்னால் இன்னும் விளையாட முடியும். ஆனால் அதற்கான பயணம் இனி இல்லை என்று நினைக்கிறேன். களத்தில் எப்போதும் சிறந்த ஒருவராக மட்டுமே நாம் இருக்க வேண்டும். ஒருவேளை நான் மீண்டும் வந்தால் அப்படியான சிறந்த நபராக இருக்க விரும்புகிறேன். சூர்யா (சூர்யகுமார் யாதவ்) மற்றும் கோலியுடன் போட்டியிட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

ab de villiers

மேலும் ஓய்வை அறிவித்தது ஏன் என்று கூறிய அவர், “எனது கேரியரின் கடைசி காலகட்டத்தில் நான் போதுமான அளவு கிரிக்கெட் விளையாடவில்லை. என்னால் வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மட்டுமே விளையாட முடியாது. அப்படி விளையாடினால் என்னால் என் சிறந்தவற்றை வெளிக்கொண்டுவர முடியாது. களத்தில் விளையாடினால் சிறந்த வீரராக மட்டுமே விளையாட வேண்டும். 9 மாதங்கள் வெளியில் இருந்து பயிற்சிபெற்றாலும், உங்களால் மூன்று மாதங்கள் மட்டும் விளையாடி சிறந்தவற்றை செய்ய முடியாது” என்று கூறினார்.

உலகக்கோப்பை வெல்ல முடியாத போது உடைந்து அழுதேன்!

அதிவேக அரைசதம், அதிவேக சதம் மற்றும் 150 ரன்கள் என்ற சாதனையையும், 3 முறை சிறந்த ஐசிசி ஒருநாள் வீரர் என்ற பல சாதனைகளை தன்னுடன் வைத்திருக்கும் டி வில்லியர்ஸுக்கு, உலகக்கோப்பை என்ற மகுடம் மட்டும் கிடைக்காமலே போய்விட்டது.

உலகக்கோப்பை வெல்ல முடியாத குறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியாவுடன் 1999 உலகக்கோப்பை செமி பைனலில் தோல்வியுற்ற போது, எனக்கு 15 வயது. அப்போது போட்டியை பார்த்து படுக்கையிலே அழுது கொண்டிருந்தேன். என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை” என்று கூறியுள்ளார். 1999 செமி பைனலை பொறுத்தவரையில் அப்போது ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவிற்கு இடையேயான அரையிறுதிப்போட்டி டிரா ஆனது. அப்போது சூப்பர் ஓவர் இல்லாத நிலையில், அட்டவணையில் அதிக புள்ளிகளுடன் இருந்த காரணத்தால் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ab de villiers

மேலும் “2015 செமி பைனலை பொறுத்தவரையில் நியூசிலாந்து அணியை தோற்கடிக்கும் ஒரு அணியை நாங்கள் வைத்திருந்ததாக நம்பினோம். ஆனால் அது முடியாமல் போனது, அந்த தோல்வியும் என் இதயத்தை ரணமாக்கியது” என்று தெரிவித்துள்ளார்.