Daryl Mitchell Cricinfo
கிரிக்கெட்

CSK-ன் 14 கோடி வீண்போகாது! டி20-ல் ருத்ரதாண்டவம் ஆடிய டேரில் மிட்செல்! கதிகலங்கிய பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 226 ரன்கள் குவித்தது நியூசிலாந்து அணி.

Rishan Vengai

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. டி20 உலகக்கோப்பைக்கு முன் முக்கியமான தொடர் என்பதால் இரண்டு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கியுள்ளன. நியூசிலாந்து அணியில் வில்லியம்சனும், பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஹரிஸ் ராஃப், ஷாகீன் அப்ரிடி என அனைவரும் பங்கேற்ற முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

4 பவுண்டரிகள் 4 சிக்சர்கள்! ருத்ரதாண்டவம் ஆடிய டேரில் மிட்செல்!

நியூசிலாந்து ஈடன் பார்க் ஆக்லாந்து மைதானத்தில் தொடங்கப்பட்ட போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. கேப்டன் பாபர் அசாமின் டாஸ் முடிவை பிரகாசிக்கும் வகையில் முதல் ஓவரின் 2வது பந்திலேயே டெவான் கான்வேவை டக் அவுட்டில் வெளியேற்றிய ஷாகீன் அப்ரிடி கலக்கிபோட்டார். ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பின் ஆலன் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Daryl Mitchell

3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ஆலன் 35 ரன்கள் அடித்து வெளியேற, நிலைத்து நின்று ஆடிய வில்லியம்சன் அரைசதம் அடித்து வெளியேறினார். அதற்குபிறகு களமிறங்கிய டேரில் மிட்செல் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றினார். எதிர்கொண்ட பவுலர்களை எல்லாம் சிக்சர் பவுண்டரிகளுக்கு விரட்டிய அவர், 4 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் விளாசி 27 பந்தில் 61 ரன்கள் குவித்தார். இறுதியாக களமிறங்கிய சாப்மன் அவருடைய பங்கிற்கு 2 சிக்சர் 2 பவுண்டரிகளை பறக்கவிட, 20 ஓவர் முடிவில் 226 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.

போராடிய பாபர் அசாம்! 180-க்கு ஆல்அவுட்டான பாகிஸ்தான்!

227 என்ற இமாலய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய சைம் ஆயுப் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் 2 ஓவரிலேயே 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என பறக்கவிட்ட இந்த ஜோடி மிரட்டிவிட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக ஆயுப் ரன் அவுட்டாகி வெளியேற, அதற்கு பிறகு கைக்கோர்த்த ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் கலக்கிப்போட்டனர்.

முகமது ரிஸ்வான்

அடுத்தடுத்து சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிய இந்த ஜோடி 5 ஓவரில் 60 ரன்களை குவித்து அசத்தியது. ஆனால் 25 ரன்னில் ரிஸ்வானை வெளியேற்றிய டிம் சவுத்தீ முக்கியமான விக்கெட்டை எடுத்துவந்தார். என்ன தான் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஒருபுறம் செம்ம டச்சில் ஜொலித்த பாபர் அசாமை, நியூசிலாந்து பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் எதிர்முனையில் இருந்த வீரர்களை குறிவைத்த நியூசிலாந்து பவுலர்கள், பெரிய பார்ட்னர்ஷிப்க்கு வழிவிடாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டே இருந்தனர். கடைசிவரை நிலைத்து நின்று ஆடிய பாபர் அசாம் அரைசதம் அடித்து அசத்தினார்.

babar azam

பாபர் இருக்கும்வரை போட்டியில் உயிர் இருந்த நிலையில், 57 ரன்னில் அவரை வெளியேற்றிய பென் முடிவுக்கு கொண்டுவந்தார். அதற்கு பிறகு 17.6 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆட்டநாயகன் விருதை டேரில் மிட்செல் தட்டிச்சென்றார்.

14 கோடிக்கு தகுதியான வீரரா? குழப்பத்தை நீக்கிய மிட்செல்!

2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்லை 14 கோடி ரூபாய்க்கு பெரிய விலைகொடுத்து வாங்கியது சிஎஸ்கே நிர்வாகம். அதேபோல அன்கேப்டு வீரரான சமீர் ரிஸ்வியை 8.4 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இந்த 2 வீரர்களின் ஏலமும் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமையுமா? இவர்கள் அவ்வளவு தொகைக்கு தகுதியான வீரர்களா? என்ற கேள்விகள் எழுந்தன.

Mitchell

டேரில் மிட்செல் ஒருநாள் போட்டிகளில் 52 சராசரியுடன் சிறப்பாக ரெக்கார்ட் வைத்திருக்கும் நிலையில், டி20 கிரிக்கெட்டில் 57 போட்டிகளில் விளையாடி 25 சராசரி மட்டுமே வைத்திருக்கிறார். இதனால் 14 கோடி ரூபாய் என்ற ஏலத்தொகைக்கு மிட்செல் தகுதியான வீரரான என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில் சிறந்த பந்துவீச்சு தாக்குதலை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 27 பந்தில் 61 ரன்னில் விளாசியிருக்கும் மிட்செல் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.