Indian cricket team - venkatesh prasad twitter
கிரிக்கெட்

“இந்திய அணியின் தோல்விக்கு காரணம், இவர்களே..” - ஹர்திக், டிராவிட்டை விளாசி தள்ளிய வெங்கடேஷ் பிரசாத்!

Prakash J

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2இல் வெற்றிபெற்று சமநிலையில் இருந்தன. இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (ஆகஸ்ட் 13) அமெரிக்காவின் புளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்கள் அடித்தார். பின்னர் சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி பறிகொடுத்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்தும் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கடந்த சில நாள்களாக இந்திய டி20 அணி மிக மிக சாதாரண அணியாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் திணறிய மேற்கிந்தியத் தீவுகள், இப்போது இந்திய அணியை வீழ்த்தியுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் நாம் தோல்வியடைந்திருந்தோம். தோல்விக்கு ஏதாவது காரணம் கூறாமல் வெற்றி பெறுவதற்கு என்ன செய்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

50 ஓவர் உலகக்கோப்பைக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதி பெறாத போதிலும் குறுகிய வடிவிலான ஆட்டங்களில் அந்த அணி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.

இந்திய அணியின் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை குறைவாகவே உள்ளது. இந்திய அணி அதன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல தருணங்களில் இந்திய அணியின் கேப்டன் என்ன செய்வதென்று தெரியாமல் செயல்படுகிறார். களத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கேப்டனுக்கு தெரியவில்லை. பவுலர் பேட்டிங் செய்ய முடியாது. பேட்டரால் பந்து வீச முடியாது. ஆகவே கண்மூடித்தனமாக தனக்குப் பிடித்தமான வீரரையே கேப்டன் களத்தில் இறக்கக்கூடாது. அணிக்கு யார் தேவையோ, அவர்களுடனேயே விளையாட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், “இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவும், ராகுல் டிராவிட்டும்தான் முக்கியக் காரணம். பல வருடங்களுக்கு தோனி பயன்படுத்திய யுக்தி என்ற ஒரு வார்த்தையை இந்திய அணி சமீபகாலமாக தவறாகப் பயன்படுத்தி வருகிறது. தோனி, தாம் சொன்னதைச் செய்தும் காட்டினார். ஆனால் தற்போது அந்த வார்த்தையை வைத்து அனைத்து தவறுகளையும் நியாயப்படுத்தி வருகின்றனர். அணி தேர்வில் ஒரு தெளிவே இல்லை. சம்பந்தமே இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகள் இந்திய அணியை பலவீனப்படுத்தியும் வருகிறது” எனக் கடுமையாகப் சாடியுள்ளார்.

வெங்கடேஷ் பிரசாத்

முன்னதாக இந்திய அணியின் டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்த தோல்வி குறித்து யாரிடமும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தொடரில் இருந்து ஏராளமாக கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. இந்திய அணிக்காக களம் இறங்கிய ஒவ்வொரு வீரர்களும் தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்” எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.