வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், பிப்ரவரி 29 ஆம் தேதி (நேற்று) தொடங்கிய ’Riviera’ என்ற கலாசார திருவிழா தற்போதுவரை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நான்கு நாட்கள் நடைபெறவிருக்கும் இக்கலாசார திருவிழாவானது மார்ச் 3 ஆம் தேதி நிறைவடையும். இதில் நாடு முழுவதும் உள்ள 135 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 40,000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சிவம் துபே அழைக்கப்பட்டுள்ளார். நேற்று சிறப்பு விருந்தினர் உரையின் போது, மாணவர்கள் சிலர் சிவம் துபேயின் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தினை கூறும்படி அவரிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்து பேசிய அவர், “மாணவர்கள் அனைவரும் தங்களது கனவுகளை நோக்கி ஓட வேண்டும். கல்வி பயிலும் காலங்களில் கனவுகளை எட்டிப்பிடிக்க கடின உழைப்பும் கவனமும் மாணவர்களுக்கு கட்டாயம் தேவை.
வெற்றியோ தோல்வியோ... வாழ்க்கையில் நாம் முன்னோக்கி செல்ல உதவும் ஒரு படிக்கட்டாக மட்டும் அதை எடுத்துக்கொண்டு, நம் இலக்கை நோக்கிய பயணத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல உங்கள் தாய் தந்தையரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
எனது வாழ்க்கையில் நடந்த மறக்கமுடியாத சம்பவம் என்றால், சிஎஸ்கே அணிக்காக இளம்வயதில் நான் விளையாடியதுதான். கிரிக்கெட் வீரராக நான் ஆன பிறகு இருக்கும் நினைவுகளைவிட, அதற்காக நான் முயற்சித்த நாட்களைதான் மறக்கமுடியாது. ஒருவேளை நான் கிரிக்கெட் வீரராக வர முடியவில்லை என்றால் சினிமாவில் ஹீரோவாக இருந்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.