jadeja web
கிரிக்கெட்

பாஜகவில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா! புகைப்படத்தை பகிர்ந்த மனைவி!

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பையை வீரராக வென்ற ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் டி20 ஓய்வு அறிவிப்பிற்கு பிறகு, அவரும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அவரின் டி20 கிரிக்கெட் ஓய்வுக்கு அறிவிப்புக்கு பிறகு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் அணியிலும் ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை. டி20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வடிவத்திற்கும் மூன்றுவிதமான அணிகளை தயார்செய்யும் விதத்தில் செயல்பட்டு வரும் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ரவீந்திர ஜடேஜாவை டெஸ்ட் அணிக்கான வீரராக மட்டுமே பார்ப்பதாக தெரிகிறது.

jadeja

ஜடேஜா ஒருநாள் அணியில் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்த அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக அவரை பாதுகாத்து வைக்கிறோம் என்று தெரிவித்திருந்தனர்.

jadeja

இந்நிலையில் ஓய்வுக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடங்குவார் எனத்தெரிகிறது. அதனை உறுதிசெய்யும் வகையில் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்த மெம்பர்ஷிப் கார்டை கிரிக்கெட் வீரரின் மனைவியும், குஜராத் மாநில பாஜக எம்எல்ஏவுமான ரிவாபா ஜடேஜா பகிர்ந்துள்ளார்.

பாஜகவில் இணைந்த ரவீந்திர ஜடேஜா..

நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்திருப்பதை உறுதிசெய்யும் வகையில், அவருடைய மனைவியான ரிவாபா எக்ஸ்தளத்தில் உறுப்பினர் சேர்க்கை அட்டையை பகிர்ந்துள்ளார். அவருடைய பதிவில் அவருடைய மெம்பர்சிப் கார்டு உடன், கணவரின் மெம்பர்சிப் கார்டையும் பதிவிட்டுள்ளார்.

ரவீந்திர ஜடேஜாவின் குடும்பத்தை பொறுத்தவரையில், ரிவாபா ஜடேஜா 2019-ல் பாஜகவில் சேர்ந்தார் மற்றும் 2022-ல் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். ரவீந்திர ஜடேஜாவும் தனது மனைவிக்காக பிரச்சாரம் செய்தார், மேலும் அவர் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேநேரத்தில் ரவீந்திர ஜடேஜாவின் தந்தையும் சகோதரியும் அந்த நேரத்தில் காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.