ஹர்மீத் சிங் pt web
கிரிக்கெட்

அமெரிக்காவின் கிராஸ்ரூட் கிரிக்கெட்டுக்கு என்ன வேண்டும்? கோரிக்கை வைக்கும் ஹர்மீத் சிங்

"நாங்கள் எங்களின் சிறந்த கிரிக்கெட் ஆடும்போது, பல அணிகளுக்கு பெரும் சவால் ஏற்படுத்தியிருக்கிறோம். அதனால் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று நான் நினைக்கிறேன" ஹர்மீத் சிங்

Viyan

இன்னும் கற்றுக்கொள்ள இருக்கிறது

அமெரிக்க கிரிக்கெட் அணி, இந்த டி20 உலகக் கோப்பையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தங்கள் முதல் போட்டியிலேயே 194 ரன்களை சேஸ் செய்து கனடாவை வீழ்த்திய அந்த அணி, பாகிஸ்தானை சூப்பர் ஓவர் வரை சென்று வீழ்த்தியது.

அதன் காரணமாக பாகிஸ்தான் குரூப் சுற்றிலேயே வெளியேற, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி சரித்திரம் படைத்தது அந்த அணி. நன்கு போராட்ட குணத்தை வெளிப்படுத்திய அமெரிக்கா, அதிரடியான அட்டாகிங் கிரிக்கெட்டை இந்தத் தொடர் முழுக்க வெளிக்காட்டியது. ஆண்ட்ரே கஸ், ஆரோன் ஜோன்ஸ், சௌரப் நெட்ரவால்கர், ஹர்மீத் சிங் போன்ற வீரர்கள் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.

பேட்டிங், பௌலிங் என இரண்டு ஏரியாவிலும் கைகொடுத்த ஹர்மீத் சிங், அமெரிக்க அணியின் அடுத்த கட்ட நகர்வு பற்றிப் பேசியிருக்கிறார். "எங்கள் அணியில் எல்லோருக்கும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. வெகு தூரம் பயணித்து எல்லோரும் இங்கு வந்திருக்கிறோம். அதேசமயம் நாங்கள் உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக நாங்கள் நன்கு போராடியிருக்கிறோம் என்பது பெரும் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் எங்களின் சிறந்த கிரிக்கெட் ஆடும்போது, பல அணிகளுக்கு பெரும் சவால் ஏற்படுத்தியிருக்கிறோம். அதனால் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் நல்லது

ஆனால், அமெரிக்க அணியின் முன்னேற்றத்துக்கான வேலை இப்போது தொடங்கவேண்டும். நாளை என்றெல்லாம் இல்லை. எங்களைப் பொறுத்தவரை வேலைகள் இப்போதே தொடங்குகின்றன. 2026 உலகக் கோப்பைக்கு நாங்கள் எப்படித் தயார் ஆகப் போகிறோம் என்பது பற்றி யோசிக்கவேண்டும். இன்று முதல் நாங்கள் எப்படியாக அதற்குத் தயாராகிறோம் என்பதுதான் முக்கியம். நாங்கள் எங்கள் முழு உழைப்பையும் கொடுக்கவேண்டும்.

அதேசமயம் அமெரிக்க கிரிக்கெட் சங்கமும் நிறைய போட்டிகள் ஏற்பாடு செய்யவேண்டும். நல்ல பயிற்சி மையங்கள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அதேபோல் முடிந்த வரை வீரர்கள் டி20 லீக் தொடர்களிலும் ஆடவேண்டும். 2026 உலகக் கோப்பைக்கு நல்லபடியாக தயாராகி நல்ல முடிவுகள் கிடைக்குமாறு வழிவகை செய்யவேண்டும்" என்று அடுத்த உலகக் கோப்பைக்கு டார்கெட் செய்வதாகக் கூறினார் ஹர்மீத் சிங்.

அதேசமயம், அமெரிக்க அணி அடுத்த கட்டத்துக்கு நகர உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதில் அமெரிக்கக் கிரிக்கெட் வாரியம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறினார்.

"எங்கள் அணிக்கு பயிற்சிக்கு நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும். ஒரு நல்ல சிஸ்டம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். டிரெய்னர்கள் எங்களோடு இணைந்து வருடம் முழுவதும் வேலை செய்ய வகை செய்யவேண்டும். அவர்கள் தங்கள் வீட்டில் இருந்து கூட வேலை செய்யட்டும். ஆனால், வருடம் முழுவதும் பணியாற்றுவது போல் இருக்கவேண்டும்.

இப்போது நீங்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற இடங்களைப் பார்த்தால் தெரியும். அவர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் அமைத்து வைத்திருக்கிறார்கள். உட்புற ஆடுகளங்களில் பயிற்சி செய்வதெல்லாம் எந்த வகையிலும் உதவாது. நிறைய வெளிப்புற பயிற்சி மையங்களை உருவாக்கித்தரவேண்டும்.

அமெரிக்காவின் கிரிக்கெட் சமூகம்

இப்போது இங்கே மைதானங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது பயிற்சி செய்ய நிறைய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது அவசியம். அப்போது தான் கிராஸ்ரூட் கிரிக்கெட் இங்கே முன்னேற்றம் காணும். அமெரிக்க அணியின் இரண்டாம் கட்ட வீரர்களும் தயாராவார்கள். டி20 லீக் கிரிக்கெட் என்று எடுத்துக்கொண்டால் அது கண்டிப்பாக உதவும். ஆனால் அதில் விளையாடும் ஒரு நான்கு, ஐந்து அல்லது ஆறு வீரர்களுக்கு உதவும். ஆனால், ஒரு கிரிக்கெட் விளையாடும் தேசத்தை உருவாக்க உள்கட்டமைப்புதான் மிகவும் முக்கியம்.

அமெரிக்காவில் கிரிக்கெட் சமூகம் பெரிதாக இருக்கிறது. குறிப்பாக என் ஊரான டெக்சாஸிலோ, நியூ ஜெர்ஸியிலோ நல்ல வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது. சியாட்டில் நகரிலும் பெரிய கிரிக்கெட் சமூகம் உருவாகியிருக்கிறது. மேற்கு கடற்கரையில், கலிஃபோர்னியா முழுவதுமே நிறைய கிரிக்கெட் விளையாடப்படுகிறது. ஆனால், இங்கே பயிற்சி செய்ய போதுமான வசதிகள் இல்லை என்பதுதான் பிரச்சனை. அதனால் சிறுவர்கள் ஊட்புற மைதானங்களில் பயிற்சி செய்துவருகிறார்கள்.

அமெரிக்காவில் கிரிக்கெட் வளர்ச்சி

ஒரு தொழில் முறை வீரராக உட்புற மைதானங்களுக்கும், வெளிப்புற மைதானங்களுக்குமான வித்தியாசம் எனக்குப் புரியும். உட்புற மைதானங்கலில் பயிற்சி செய்யும் சிறுவர்கள் அதன்பிறகு வெளிப்புற மைதானங்களுக்கு செல்லும்போது அங்கு முற்றிலும் மாறுபட்டிருக்கும். அதனால் எல்லாமே மாறவேண்டும். அதனால் எதிர்காலத்தில் மைதானங்கள் கட்டுவதோடு மட்டுமல்லாமல் பயிற்சிக்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்தால் நன்றாக இருக்கும். இந்தியாவாகட்டும், அதுபோன்ற வேறு எதாவது டெஸ்ட் விளையாடும் நாடாகட்டும் அங்கு நிறைய பிராக்டீஸ் கிரவுண்ட்கள் இருக்கின்றன. அங்கு இருக்கும் அகாடெமிகள் அனைத்தும் வெளிப்புற அகாடெமிகளாகவே இருக்கின்றன. மழை பெய்தால் மட்டுமே அவர்கள் உட்புற மைதானங்களுக்குச் செல்கிறார்கள்.

பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளின் பயிற்சிக்காக பெரும் செலவு செய்கிறார்கள். அது எனக்குத் தெரியும். ஆனால், அந்த பயிற்சியெல்லாம் உள்புற மைதானங்களில்தான் நடக்கின்றன. அதுதான் பிரச்சனை. இங்கு வளர்ச்சி என்பது பெரிய அளவில் இல்லை. அது தேக்க நிலையில்தான் இருக்கிறது.

இந்த குழந்தைகள் எப்போது வெளிப்புற மைதானங்களுக்குச் செல்கிறார்களோ அப்போது பெரும் நெருக்கடியை சந்திக்கிறார்கள். அவர்களால் வெப்பத்தை சமாளிக்க முடிவதில்லை. ஐயோ சூடு என்கிறார்கள். ஆனால் அது அப்படித்தானே இருக்கும்" என்று உள்கட்டமைப்பு வசதிகளின் அவசியத்தை உணர்த்தினார் ஹர்மீத் சிங்.