மைதானம்: ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் ஸ்டேடியம், உப்பல், ஹைதராபாத்
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 6, மதியம் 2 மணி
2023 ஐசிசி உலகக் கோப்பை தொடர் வியாழக்கிழமை அஹமதாபாத்தில் தொடங்கிவிட்டது. முதல் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. கடந்த 2 உலகக் கோப்பை தொடர்களிலும் பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. 2015 உலகக் கோப்பையில் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 76 ரன்களில் தோல்வியடைந்தது. 2019 உலகக் கோப்பையிலோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக படுதோல்வியடைந்தது பாகிஸ்தான். வெறும் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அந்த அணி, 7 விக்கெட்டுகளில் வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றது. அந்தப் போட்டியை வென்றிருந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். அதனால் இந்தத் தொடரில் சிறப்பாக தொடங்குவது அந்த அணிக்கு மிகவும் முக்கியம்.
எதிரணி நெதர்லாந்து என்பதால் பாகிஸ்தான் அணிக்கு அது ஆறுதலான விஷயமாக அமையும். இருந்தாலும் அந்த அணியிலும் ஒருசில பிரச்சனைகள் இருக்கிறது. ஆசிய கோப்பை தொடரின்போது வேகப்பந்துவீச்சாளர்கள் ஹாரிஸ் ராஃப் மற்றும் நஷீம் ஷா இருவரும் காயமடைந்தனர். நஷீம் ஷா காயத்திலிருந்து மீளாதது அவர்களின் பந்துவீச்சைப் பலவீனப்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அணிக்குத் திரும்பிய ஹாரிஸ் ராஃபும் சற்று சொதப்பலாகவே பந்துவீசுகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அவரது பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. ஏற்கெனவே நஷீம் ஷாவை இழந்திருக்கும் அந்த அணிக்கு இதுவும் பின்னடைவு. அதுமட்டுமல்லாமல் ஸ்பின்னர் ஷதாப் கானும் கூட சமீப காலமாகவே தடுமாறிக்கொண்டுதான் இருக்கிறார். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஷஹீன் அஃப்ரிடியைத் தவிர மற்ற பௌலர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் ஃபார்மில் இல்லை.
இது ஒருபுறமென்றால் ஓப்பனர்கள் ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக் இருவரும் முன்பைப் போல் நல்ல தொடக்கம் கொடுக்கத் தவறுகின்றனர். அதிலும் குறிப்பாக ஃபகர் ஜமான் தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருக்கிறார். அதனால் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டையே அந்த அணி அதிகம் நம்பவேண்டியதாக இருக்கிறது.
நெதர்லாந்து அணியை நிச்சயம் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் அந்த அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இத்தொடருக்குத் தகுதி பெற்றது. அதுவும் வேன் மீக்ரன், வேன் டெர் மெர்வ் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே அந்த அணி முன்னேறியதுதான் சிறப்பம்சம். வேன் மீக்ரன், வேன் டெர் மெர்வ், பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ் போன்ற வீரர்களால் நிச்சயம் போட்டியை தங்கள் அணிக்கு சாதமாக மாற்றக் கூடிய சிறப்பான செயல்பாட்டைக் கொடுக்க முடியும்.
போட்டி நடக்கும் உப்பல் ராஜிவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சாதகமானது. முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்சம் 300 ரன்கள் எடுக்கவேண்டும். இங்கு நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் (இந்தியா vs நியூசிலாந்து) 686 ரன்கள் குவிக்கப்பட்டது. சுப்மன் கில் அந்தப் போட்டியில் இரட்டைச் சதமடித்து அசத்தினார். அப்படிப்பட்ட மைதானத்தில் நிச்சயம் மிகப் பெரிய ஸ்கோர் எடுக்கவேண்டியதிருக்கும். இந்த உலகக் கோப்பைக்கான பயிற்சிப் போட்டிகள் கடந்த வாரம் இம்மைதானத்தில் நடந்தபோது மழை பெய்து போட்டிகளை பாதித்தது. இருந்தாலும், இந்தப் போட்டி நடக்கும் வெள்ளிக் கிழமை (இன்று) மழை வர வாய்ப்பில்லை என்று வானிலை அறிக்கை தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தான்: பாபர் ஆசம் - பாகிஸ்தான் அணியின் கேப்டன் நிச்சயம் இந்த உலகக் கோப்பையில் டாப் ரன் ஸ்கோர்களில் ஒருவராகத் திகழ்வார். உலகின் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனான அவர், மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஹைதராபாத்தில் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு பெரும் ஆதரவு இருக்கும். அந்த மைதானத்தில் நிச்சயம் அவர் பெரும் தாக்கம் ஏற்படுத்த விரும்புவார்.
நெதர்லாந்து: பாஸ் டி லீட் - 23 வயதேயான இளம் பாஸ் டி லீட் பேட்டிங், பௌலிங் என இரண்டு ஏரியாவிலுமே அசத்தக் கூடிய ஒருவர். மிடில் ஆர்டரில் நம்பத்தகுந்த இன்னிங்ஸ் ஆடக்கூடியவர். தகுதிச் சுற்றுப் போட்டிகளில் சதமடித்த அவர், சமீபத்தில் கவுன்டி போட்டியிலும் கூட சதம் அடித்தார். தன் வேகப்பந்துவீச்சாலும் அணிக்கு பெரும் பலமாக விளங்குவார்.
யாருக்கு வெற்றி வாய்ப்பு: பாகிஸ்தான் எந்த சிக்கலும் இல்லாமல் இந்தப் போட்டியை வெல்லவேண்டும்!