பொதுவாக சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டி எதற்காக எல்லாம் இடைநிறுத்தப்பட்டு இருக்கிறது என்று பார்த்தால், மழைக்காக நிறுத்தப்படும், பனிப்பொழிவால் நிறுத்தப்படும், போதிய வெளிச்சமின்மையால் நிறுத்தப்படும்... ஆனால், இன்னும் சில சுவாரஸ்யமான காரணங்களுக்காக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
செஞ்சுரியனில் நேற்று நடந்த இந்தியா தென்னாப்ரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி 219 ரன்களை எடுத்தது. பின் 220 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி 7 விக்கெட்களை இழந்து 208 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனிடையே பூச்சிகளால் ஆட்டம் 20 நிமிடம் வரை தடைபட்டது.
இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசிவிட்டாலும், இரண்டாவது ஓவரை வீச ஹர்திக் பாண்டியா வந்தார். அப்போது பூச்சிகளின் தொல்லை அதிகரித்தது. பூச்சிகள் மிக அதிகளவில் மைதானத்தை வட்டமிட்ட நிலையில், வீரர்களின் பாதுகாப்பு கருதி ஆட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இருநாட்டு வீரர்கலும் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் காத்திருந்தனர். நடுவர்களின் ஆய்வுக்குப்பின் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது
ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஒன்று Sheffield Shield தொடர். 2017 ஆம் ஆண்டு நவம்பரில் பிரிஸ்பேனில் நடந்த போட்டி ஒன்றில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதியில் நியூசவுத் வேல்ஸ் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. இந்நிலையில், திடீரென மைதானத்தில், தீ விபத்திற்கான எச்சரிக்கை மணி அடித்தது. தீயணைப்பு வாகனங்கள் எல்லாம் சம்பவ இடத்திற்கு வந்துவிட, 30 நிமிடங்களுக்கு போட்டி இடைநிறுத்தப்பட்டது. காரணம் என்னவென்றால், ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த நாதன் லயன், டோஸ்டரில் இருந்து ப்ரெட்களை எடுக்க மறந்த நிலையில் வெளியான புகை தீ எச்சரிக்கை மணி ஒலிக்க வழிவகுத்துள்ளது.
2017 ஆம் ஆண்டு ப்ளூம்ஃபோன்டெய்னில் தென்னாப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், வங்கதேச அணி வீரர்களுக்கு உணவு விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஆட்டம் மீண்டும் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. வங்கதேச அணிக்கு 10 நிமிடங்கள் தாமதமாக உணவு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தேனிக்களால் போட்டிகள் அதிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று இணையதளங்களில் கிரிக்கெட் வீரர்கள் தரையில் படுத்து இருப்பது போன்ற மீம்ஸ்கள் அதிகளவில் காணப்படும். இவையாவும் தேனீக்களால் நிகழ்ந்ததாக இருக்கலாம்.
2017 ஆம் ரஞ்சி டிராபி தொடரில் டெல்லியும் உத்தரப்பிரதேசம் அணிகளும் மோதின. இதில் மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, க்ரிஷ் சர்மா என்ற நபர் தனது வேகன் ஆர் காரை மைதானத்திற்குள் ஓட்டி வந்தார். சம்பவம் நிகழ்ந்த பின் ஆட்டத்தின் நடுவர் மைதானத்தை சோதனை செய்து, எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி செயிண்ட் கீட்ஸில் உள்ள வார்னர் பார்க்கில் நடந்தது. இந்த போட்டியின்போது இந்திய அணியின் உடைமைகள் வந்து சேருவதற்கு தாமதமானதால் ஆட்டம் 3 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது.