டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை ராஜஸ்தான் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, தொடக்கமே அதிரடியாக விளையாடியது. மெக்கர்க், அபிஷேக் போரல் அரைசதம் விளாச, மற்றவர்கள் சற்று தடுமாறினர். இருப்பினும், கடைசி நேரத்தில் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி 41 ரன்கள் எடுக்க அந்த அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்தது.
222 என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், தொடக்கத்தில் தடுமாறினாலும், கேப்டன் சாம்சன் இலக்கை நோக்கி அணியை அழைத்துச் சென்றார். 86 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, மற்றவர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால், அந்த அணி 20ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு நீடிக்கிறது.
நேற்று சாம்சன் அவுட் ஆன விவகாரம்தான் ஐபிஎல்லில் தற்பொதைய ஹாட் டாபிக். முகேஷ் குமார் வீசிய 16 ஆவது ஓவரின் 4 ஆவது பந்து ஒட்டுமொத்த ஆட்டத்தையும் தலைகீழாக புரட்டிப் போட்டது. சாம்சன் பந்தினை தூக்கி அடிக்க, லைனில் நின்றிருந்த ஹோப் தடுமாறிப் பிடித்துவிட்டார். ஆனால், அவரது கால்கள் பவுண்டரி லைனில் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் இருந்ததுபோல் தோன்றியது. சஞ்சு சாம்சன் அவுட்டா நாட் அவுட்டா என்பதைத் தீர்மானிக்க அம்பயர்கள் அதிக நேரத்தும் ஒன்றுக்கு இரண்டு மூன்று கோணங்களில் பார்த்து முடிவு சொல்லாமல் சட்டென சொல்லிவிட்டனர். அதனால், அவுட் என அறிவிக்கப்பட்டதில் சாம்சனுக்கு அதிருப்தியே.
இதன் காரணமாக களத்தில் இருந்த நடுவர்களுடன் சாம்சன் இதுகுறித்துப் பேசினார். மீண்டும் ரிவ்யூக்கு சாத்தியமா என்றெல்லாம் கேட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னரே சஞ்சு ஏமாற்றத்துடன் வெளியேறினார். இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு சஞ்சுக்கு கொடுக்கப்பட்ட முடிவே காரணம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் நிர்வாகம் இதுகுறித்து கூறுகையில், “ஐபிஎல் நடத்தை விதி 2.8ன் கீழ் சாம்சன் லெவல் 1 குற்றத்தைச் செய்துள்ளார். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி போட்டி நடுவரின் முடிவையும் ஏற்றுக்கொண்டார். லெவர் 1 நடத்தை விதிமீறல்களுக்கு போட்டி நடுவரின் முடிவே இறுதியானது” என தெரிவித்துள்ளது. இவ்விதியின் கீழ், சஞ்சு சாம்சனுக்கு போட்டி விதியின் கீழ் 30% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்ககரா கூறுகையில், “இம்முடிவுகள் ரிப்ளேக்கள் மற்றும் ஆங்கிள்களைப் பொறுத்தது. சில சமயங்களில் கால்கள் பவுண்டரி லைனை தொட்டதாக நாம் நினைக்கலாம். இதுபோன்ற சூழலில் மூன்றாம் நடுவரும் தீர்ப்பளிப்பது கடினம். மூன்றாம் நடுவர் எடுத்த முடிவிற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். எங்களுக்கு வேறுவிதமான கருத்துக்கள் இருந்தால் அதை நடுவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். ஆன் பீல்டு அம்பயர்கள் மூன்றாம், நடுவர் சொல்வதை பின்பற்ற வேண்டும். நாள் முடிவில் அனைத்து வீரர்களும் அதைப் பின்பற்ற வேண்டும். அந்த ஆட்டமிழப்பை பொருட்படுத்தாமல், நாங்கள் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் டெல்லி சிறப்பாக விளையாடி கடைசி வரை போராடியது” என தெரிவித்திருந்தார்.
சாம்சன் 11 ஆட்டங்களில் விளையாடி 471 ரன்களைக் குவித்துள்ளார். ஆரஞ்ச் தொப்பிக்கான பந்தயத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதில் 5 அரைசதங்களும் அடக்கம். கடந்த சீசன்களில் தொடர்ச்சியாக ரன்களை எடுப்பது சாம்சனுக்கு சிக்கலாகவே இருந்துள்ளது. சுழற்பந்து பந்துவீச்சாளர்களால் ஆட்டமிழக்காமல் இருப்பது மிக முக்கியமான ஒன்று என்று ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்ககராவே தெரிவித்துள்ளார்.
அவரது ஆட்டத்திறன் குறித்து சங்ககரா கூறியதாவது, “சாம்சனுக்கு இந்த சீசனில் அவரது பேட்டிங் திறன் குறித்து அவருக்கு தெளிவு உள்ளது. அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்ஸ்மேனாகவும் தனது பாத்திரத்தில் உறுதியாக இருக்கிறார். அனைத்து நேரத்தில் பயிற்சி மற்றும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வாக இருப்பதை விட, ஓய்வு மற்றும் மீண்டு வருவதைப் பற்றிய அவரது மனநிலையை மாற்றியுள்ளார். அவர் மிகவும் சிறப்பான வீரர், அடக்கமான பையன்” என தெரிவித்தார்.