டிம் பெயின், 2017ஆம் ஆண்டு சக பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியிலானன புகைப்படம் மற்றும் குறுஞ்செய்திகளை பரிமாற்றியதற்காக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த இந்த சர்ச்சையில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர், அவருடைய மனைவியிடம் இருந்து விவாகரத்தையும் பெற்றார்.
இதுகுறித்து அப்போது பேசியிருந்த டிம் பெய்ன், “கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன், என்னுடைய சக ஊழியரிடம் தவறான முறையில் நடந்து கொண்டேன். இந்த தனிப்பட்ட விஷயமானது ஒருநாள் பகிரங்கமாகப் போகிறது என்பதை இப்போதே அறிகிறேன். 2017 -ல் நான் செய்த விஷயங்கள், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் கேப்டனாக என் தரத்தை பூர்த்தி செய்யவில்லை. எனது மனைவி, எனது குடும்பம் மற்றும் மற்ற தரப்பினருக்கு நான் ஏற்படுத்திய காயம் மற்றும் வலிக்காக நான் அதிகமாக வருந்துகிறேன். இது எங்கள் விளையாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதை நினைத்தால் என்னால் தாங்கமுடியவில்லை” என்று கூறியிருந்தார்.
1999ஆம் ஆண்டு, ஒரு நாள் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சிட்னியில் இரவு விடுதியில் நடந்த சண்டையில் பாண்டிங் மயக்கமடைந்ததாக செய்திகள் வெளியாகின. பின்னர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் அடிபட்ட கண்களோடு பாண்டிங் தோன்றினார்.
அப்போது அவர் குடிப்பழக்கத்தை ஒப்புக்கொண்டார். மேலும் அதிலிருந்து மீண்டுவருவதற்காக ஆலோசனை பெற்றுவதாகவும் உறுதியளித்தார். "இதை நினைத்து நான் மிகவும் வெட்கப்படுகிறேன். இது நிச்சயமாக மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள கடினமாக உழைக்கப் போகிறேன். சில சமயங்களில் நான் அதிகமாக குடித்துவிட்டு, செய்யக்கூடாத சில விஷயங்களை செய்து, பல மோசமான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்கிறேன்" என்று பாண்டிங் கூறினார்.
1994ஆம் ஆண்டு இலங்கைக்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்த போது, ஆஸ்திரேலிய ஜாம்பவான்களான மார்க் வா மற்றும் ஷேன் வார்ன் இருவரும், இந்திய ஏஜெண்டான 'ஜான்' என்ற புக்மேக்கரிடம் பிட்ச் மற்றும் வானிலை தகவல்களை பகிர்வதற்காக லஞ்சம் பெற்றனர்.
இது 1998-ல் ஊடகங்களால் அறிவிக்கப்பட்டது. மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு இது 1995-ம் ஆண்டே தெரியவந்தும் மூடிமறைக்க முயற்சித்ததும் அம்பலமானது. இந்த சர்ச்சை ஆஸ்திரேலியா பாராளுமன்றம் வரை பிரதிபலித்தது.
ஆன்டிகுவாவில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் மற்றும் மேற்கிந்திய வீரர் ராம்நரேஷ் சர்வான் இருவரும் களத்தில் ஆபாசமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மெக்ராத்தின் நோய்வாய்ப்பட்ட மனைவி, மறைந்த ஜேன் மெக்ராத் பற்றி சர்வான் கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேலி செய்ததற்கு பதிலளித்த சர்வான், மெக்ராத்தை கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது சர்வானை நோக்கி "If you f**king mention my wife again, I’ll f**king rip your f**king throat out" என்று ஆபாச வார்த்தைகளை கூறி பேசினார்.
2003ஆம் ஆண்டு ஊக்க மருந்தை உட்கொண்டதாக ஷேன் வார்ன் சோதனைக்குள் ஆட்கொள்ளப்பட்டார். சோதனையின் போது தனது தாய் வழங்கிய டயட் மாத்திரையை பயன்படுத்தியதாக கூறினார். அதில் ஹைட்ரோகுளோரோதியாசைட் மற்றும் அமிலோரைடு மருந்துகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டு, அவருக்கு 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.
ஆனால், “நான் ஊக்கமருந்து எதிர்ப்பு வெறிக்கு பலியாகிவிட்டதாக உணர்கிறேன். ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகள் எதையும் நான் ஒருபோதும் எடுத்துக் கொள்ள மாட்டேன்” என்று வார்ன் கூறினார்.
2008ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு சென்ற போது, சவுரவ் கங்குலி தவறாக அவுட் செய்யப்பட்டார். 2வது டெஸ்ட் போட்டியின் போது பிரட் லீயின் பந்தில் எட்ஜ் ஆனார் கங்குலி. அப்போது 3வது ஸ்லிப்பில் இருந்த மைக்கேல் கிளார்க் பந்து முதலில் தரையில் பட்டாலும் கேட்ச் பிடித்ததாக விக்கெட்டை கொண்டாடினார்.
ரீப்ளேவில் பந்து தரையில் பட்டது தெரிந்தாலும், விக்கெட்டா? இல்லையா? என ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிடம் கேட்டு அம்பயர் அவுட் கொடுத்தது சர்ச்சையாக மாறியது. மேலும் ரீப்ளேவை பாத்த பிறகும் ரிக்கி பாண்டிங் அவுட் என கை நீட்டி காமித்தது தற்போதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
2003-ல் இலங்கை அணிக்கு எதிராக இனவெறி கருத்துக்களை கூறியதற்காக ஆஸ்திரேலிய வீரர் டேரன் லீமன் தடை செய்யப்பட்டார். அடிலெய்டில் நடந்த VB முத்தரப்பு தொடரின் ஒரு நாள் போட்டியில், அவர் ரன் அவுட் ஆனபோது இந்த சம்பவம் நடந்தது. ஆவேசமாக டிரஸ்ஸிங் அறைக்குச் சென்ற அவர், இலங்கை ரிசர்வ் வீரர்களின் திசையை பார்த்து "C***s, c***s, f***ing black c***s" என்று இனவெறி ரீதியில் கூறினார்.
பின்னர் நடந்த சம்பவத்திற்காக அவர் இலங்கையர்களிடம் மன்னிப்பு கேட்டாலும் 5 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
2018-ல் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தின் ஒரு பக்கத்தை மணர்த்துகள்கள் கொண்ட காகித அட்டை மூலம் சேதப்படுத்தியது கிரிக்கெட் உலகையே உலுக்கியது.
இதனால் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர் (துணை கேப்டன்) மற்றும் பேன்கிராஃப்ட் 3 பேருக்கும் 12 மாதங்கள் மற்றும் 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. அந்த சர்ச்சை விசயத்திற்கு பிறகு பல்வேறு விதமாக இன்னும் ஸ்டீவ் ஸ்மித் அவமானம் செய்யப்பட்டு வருகிறார்.
பிப்ரவரி 1, 1981ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகம் ஒரு சோகமான நாளை சந்தித்தது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனான கிரெக் சேப்பல், ஒரு சர்ச்சைக்குரிய நடவடிக்கையில், வெற்றியைப் பெறுவதற்கான ஓட்டையைப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அவருடைய அந்த செயலால் அவரின் மரியாதையை இழந்தார்.
1981ல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போது வெற்றிக்கு கடைசி பந்தில் 7 ரன் தேவைப்பட்டது. போட்டியை சமன் செய்ய ஒரு சிக்சர் அடிக்க வேண்டிய இடத்தில் நியூசிலாந்து அணி இருந்தது. அப்போது பந்துவீச்சாளராக இருந்த தன்னுடைய தம்பி ட்ரெவர் சேப்பலை அண்டர் ஆர்ம் பந்தாக உருட்டி விட சொல்ல, அவர் பந்தை கீழே உருட்டிவிட்டு போட்டியை ஆஸ்திரேலியா வெற்றிபெறும். அந்த மோசமான செயலானது கிரிக்கெட் வரலாற்றில் இன்னும் கருப்பு புள்ளியாக இருந்துவருகிறது. அதற்கு பிறகு அண்டர் ஆர்ம் பந்தானது கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டது.