ஹர்பஜன் - ரெய்னா - யுவராஜ் web
கிரிக்கெட்

மாற்றுத்திறனாளிகளை கேலிசெய்யும் வகையில் சர்ச்சை வீடியோ! யுவராஜ்,ஹர்பஜன், ரெய்னா மீது போலீஸில் புகார்

ஊனமுற்றவர்களை அவமதிக்கும் வகையில் வீடியோ பதிவிட்டதாக யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ரெய்னா மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய சாம்பியன்ஸ் அணி யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி 2024 உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் கோப்பையை தட்டிச்சென்றது.

லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிராக 68 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றிக்கு பிறகு மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் யுவராஜ் சிங் முதலிய முன்னாள் இந்திய வீரர்கள் பதிவிட்ட வீடியோ பதிவானது பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.

ஊனமுற்றவர்கள் போல் செலப்ரேட் செய்த இந்திய வீரர்கள்!

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ரெய்னா ஆகியோர் முதுகைப் பிடித்துக் கொண்டு நொண்டி வருவதை போல சைகை செய்திருந்தனர்.

இந்த வீடியாவை சமூக வலைதளங்களில் கண்ட மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்கள் வீடியோவை அருவருப்பானதாகக் விமர்சித்தனர். மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய தளமானது தங்களுடைய X பக்கத்தில் கிரிக்கெட் வீரர்களின் வீடியோவை பகிர்ந்து "முற்றிலும் அவமானகரமானது" என்று எதிர்ப்பை தெரிவித்தது.

வீடியோவை கண்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை வழக்கறிஞர் ஒருவர், "பலபேர் இவர்களைப் பின்தொடரும் போது அவர்களும் இந்த செயல்களைப் பின்பற்றுவார்கள், எனவே பொறுப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு எந்த வருத்தமும் இல்லாமல் ஊனமுற்றவர்களை கேலி செய்கிறார்கள்" என்று கண்டித்து குறிப்பிட்டார்.

யுவராஜ் முதலிய வீரர்கள் மீது போலீஸில் புகார்..

வீடியோவை கண்டித்த மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் (NCPEDP) செயல் இயக்குநர் அர்மான் அலி, "இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வதைப் பார்ப்பது அருவருப்பானதாக இருக்கிறது. வெகுஜனங்களால் பின்தொடரப்படுபவர்களிடம் இருந்து வெட்கக்கேடான செயல் இது. இதை உடனடியாக கவனிக்க பிசிசிஐ-யை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தி இந்துவில் கண்டித்து பேசியுள்ளார்.

அதனுடன் நிறுத்தாத அவர், அமர் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அந்த புகாரில், கிரிக்கெட் வீரர்கள் தவிர, மெட்டா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தியா தேவநாதன் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ஐ மீறி, இதுபோன்ற உள்ளடக்க வீடியோவை வெளியிட அனுமதித்ததாகவும் மெட்டா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யுவராஜ் - ஹர்பஜன் - ரெய்னா

மேலும், "இந்த வீடியோ இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் அப்பட்டமான விதிமீறல் ஆகும், இது ஒவ்வொரு நபருக்கும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் இது மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016 இன் பிரிவு 92-ஐ மீறுகிறது என்றும்” அர்மான் அலி புகாரில் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அமர் காலனி காவல்நிலையத்தில் புகார் பெறப்பட்டதாகவும், இது தொடர்பான மேல்விசாரணைக்காக மாவட்டத்தின் சைபர் செல்லுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.