India Women’s team pt desk
கிரிக்கெட்

"டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் ஸ்பெஷலான ஒன்று" - பயிற்சியாளர் அமோல் மஜோம்தார்

Viyan

தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியினர், இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடு வருகின்றனர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்று வைட் வாஷ் செய்தது இந்திய அணி. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன் இரு அணிகளும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன. டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் சென்னையில் நடக்கின்றன.

India women's team

இந்நிலையில் இந்திய மகளிர் அணி டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது பெண்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்லது என்றும் கூறியிருக்கிறார் இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் மஜோம்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் பற்றிப் பேசிய மஜோம்தார், "பெண்களுக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்துவது சிறப்பானதாக இருக்கும். ஆனால் அந்த முடிவு கிரிக்கெட் போர்டின் கையில்தான் இருக்கிறது. அது நடந்தால் அது கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்லது. டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் ஸ்பெஷலான ஒன்று" என்று கூறினார்.

டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து மெருகேறிக் கொண்டிருக்கும் இந்திய அணியைப் பற்றிப் பேசிய மஜோம்தார்...

"எங்கள் அணி தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது. முதலில் வங்கதேசத்தில் வெற்றி பெற்றோம். இப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றிருக்கிறோம். இது வேறு வேறு ஃபார்மட்களாக இருக்கலாம். ஆனாலும் வெற்றிகள்தான். அதேசமயம் ஒவ்வொரு போட்டிகளையும் நாங்கள் கவனமாகவே எதிர்கொள்கிறோம். டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை இதன் எதிர்பார்ப்புகள் கண்டிப்பாக வேறுதான். ஆனால் அதற்கு இந்த அணி தயாராகத்தான் இருக்கிறது. முன்னேற்றம் என்று பார்த்தால், இந்த அணி அனைத்து ஏரியாக்களிலுமே முன்னேற்றம் காண முடியும். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் அனைத்திலுமே முன்னேற்றம் காணலாம். நான்காவதாக ஃபீல்டிங்கிலும் கூட முன்னேற்றம் காணலாம்.

RCB Women vs Men Team

டிசம்பரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நாங்கள் அடுத்தடுத்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினோம். பெண்கள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இனி டெஸ்ட் கிரிக்கெட் ஒரு முக்கிய அங்கமாக இருக்கப்போகிறது. அதனால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கும் இன்டர்ஜோனல் போட்டிகள் பெரும் முக்கியத்துவம் பெறும். இதன்மூலம் எங்கள் கவனம் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் மீது மட்டுமல்ல என்பதை வீரர்களும் உணர்ந்து கொள்வார்கள். ரெட் பால் கிரிக்கெட் மீதும் நாங்கள் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறோம். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி நிச்சயம் பெரிய எழுச்சி காணும் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயம் அதற்கு தகவமைத்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று.

இன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் அதிகம் எதிர்பார்பபது இதுதான். ஒரு அணியாக நீங்கள் அதிலிருந்து தப்பிக்க முடியாது. ஒவ்வொரு ஃபார்மட்டுக்கும் ஏற்றது போல் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. மிகப் பெரிய சவால்தான். ஆனால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கவேண்டும்" என்றார்.

சிறப்பாக செயல்படும் இந்திய பெண்கள் அணி!

மஜோம்தார் கூறியது போல் இந்திய பெண்கள் அணி டெஸ்ட் அரங்கில் சமீப காலமகா சிறப்பாக செயல்பட்டுவருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து இங்கிலாந்தையும் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது இந்தியா. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் அசத்திய இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

India women's team

ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்திய ஹர்மன்ப்ரீத் அண்ட் கோ 8 விக்கெட்டுகளில் வெற்றியை வசப்படுத்தியது. ஷார்ட் ஃபார்மட்டில் ஆடும் ஸ்டார் பிளேயர்கள் என்று இல்லாமல் டொமஸ்டிக் ரெட் பால் தொடர்களில் நன்றாக ஆடிய சுபா சதீஷ் போன்ற வீராங்கனைகளை இந்திய நிர்வாகம் தேர்வு செய்தது. அது நல்ல பலன்களைக் கொடுத்திருக்கிறது.

டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஸ்குவாட்:

ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணைக் கேப்டன்), பிரியா பூனியா, ஜெமீமா ராட்ரிக்யூஸ், உமா செத்ரி (விக்கெட் கீப்பர்), ஷெஃபாலி வெர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சுபா சதீஷ், தீப்தி ஷர்மா, ஸ்னே ராணா, ராஜேஷ்வரி கெயக்வாட், சைகா இஷாக், மேக்னா சிங், அருந்ததி ரெட்டி, ஷப்னிம் ஷகீல், ரேணுகா சிங், பூஜா வஸ்த்ரக்கர்.