pujara X
கிரிக்கெட்

17வது இரட்டை சதம் விளாசிய புஜாரா! அதிகமுறை இரட்டை சதமடித்து சாதனை! இந்திய அணியில் இடம்பெறுவாரா?

ரஞ்சிக்கோப்பை போட்டியில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக 243 ரன்களை குவித்து அசத்தியுள்ளார் சட்டீஸ்வர் புஜாரா.

Rishan Vengai

89வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூன் 5ம் தேதி முதல் மார்ச் 14ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 38 அணிகள் பங்குபெறும் இத்தொடரில் 32 அணிகள் எலைட் பிரிவிலும், 6 அணிகள் பிளேட் பிரிவிலும் இடம்பிடித்துள்ளன. 32 அணிகள் பங்குபெற்றுள்ள எலைட் பிரிவில் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குரூப்பிலும் தலா 8 அணிகள் இடம்பிடிக்கும்.

லீக் சுற்றின்படி, ஒவ்வொரு குரூப்பிலும் ஒரு அணி மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். பின்னர் குரூப்பில் முதலிரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறும். அதன்பிறகு பிளேட் பிரிவிலிருந்து முன்னேறும் அணிகளுடன், எலைட் அணிகள் சேர்ந்து அரையிறுதிக்கு போட்டியிடும். லீக் சுற்றில் கடைசி 2 இடங்கள் பிடிக்கும் அணிகள், அடுத்த ரஞ்சி கோப்பை தொடருக்கு பிளேட் பிரிவுக்கு தரம் இறக்கப்படும்.

இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத இடம் - பின்னர் அணியிலிருந்து நீக்கம்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தை பிடித்திருந்தவர் சட்டீஸ்வர் புஜாரா. விராட் கோலி அணியில் இருந்த போதும் கூட, மற்ற ஜாம்பவான் அணிகள் புஜாராவின் விக்கெட்டை எதிர்நோக்கும் வகையில் ஒரு ஜாம்பவான் டெஸ்ட் வீரராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்றபோது கூட, புஜாராதான் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார்.

pujara

இரண்டாவது முறை ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சென்ற போது, “கடந்தமுறை புஜாராவை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்தமுறை அவருக்காக தனி பிளான் வைத்திருக்கிறோம்” என தற்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். அந்தவகையில் ஒரு திறமையான வீரராக இருந்தவரை, 2022 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணியிலிருந்து வெளியேற்றியது நிர்வாகம்.

காரணம் அவர் முக்கியமான கோப்பைக்கான போட்டியில் 14 மற்றும் 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தோல்விக்கு பொறுப்பேற்கும் வகையில் புஜாராவை அணியிலிருந்து வெளியேற்றியது பிசிசிஐ. அதற்கு பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவருடைய நீக்கலில் உறுதியாக இருந்த இந்திய அணி, அவருக்கான இடத்தில் சுப்மன் கில்லை களமிறக்கி விளையாடிவருகிறது.

Pujara

இந்நிலையில் சுப்மன் கில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், தன்னுடைய இடத்தை மீண்டும் பிடிக்கும் வகையில் ஒரு அபாரமான இரட்டை சதத்தை பதிவுசெய்துள்ளார் சட்டீஸ்வர் புஜாரா.

30 பவுண்டரிகள், 243 ரன்கள் குவித்த புஜாரா!

கடந்த ஜனவரி 5ம் தேதி ஜார்கண்ட் மற்றும் சவுராஸ்டிரா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டி தொடங்கியது. நடப்பு சாம்பியன் அணியான சவுராஸ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்தது. தேசாயின் அசத்தலான அரைசதத்தால் 100 ரன்கள் எட்டியது சவுராஸ்டிரா அணி. பின்னர் ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் ஜேக்சன் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜேக்சன் அரைசதமடித்து 54 ரன்னில் வெளியேற, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா சதமடித்து அசத்தினார்.

pujara

பின்னர் தொடர்ந்து 30 பவுண்டரிகளை விரட்டி இரட்டை சதத்தை பதிவுசெய்த அவர், சவுராஸ்டிரா அணியை 500 ரன்களுக்கு மேல் எடுத்துச்சென்றார். புஜாரா 243 ரன்கள் குவித்து அசத்த, 578/4 ரன்களில் டிக்ளார் செய்தது சவுராஸ்டிரா அணி. தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆடிவரும் ஜார்கண்ட் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்களுடன் விளையாடிவருகிறது.

முதல் தர கிரிக்கெட்டில் 17 இரட்டை சதம்! ரஞ்சிக்கோப்பையில் 8 இரட்டை சதம்!

ஒரு வரலாற்று இரட்டை சதத்தின் மூலம் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளார் புஜாரா. இந்த ஆட்டத்திற்கு பிறகு ஜனவரி 25ம் தேதி தொடங்கும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் புஜாரா இடம்பிடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் 243 ரன்களை குவித்த புஜாரா முதல்தர கிரிக்கெட் மற்றும் ரஞ்சி கோப்பை தொடரில் புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

Pujara

முதல்தர கிரிக்கெட்டை பொறுத்தவரையில், தன்னுடைய 17வது இரட்டை சதத்தை பதிவுசெய்திருக்கும் புஜாரா, அதிகமுறை முதல்தர இரட்டை சதங்களை பதிவுசெய்த ஒரே இந்திய வீரராவார். இந்த பட்டியில் 17 இரட்டை சதங்களுடன் ஹெர்பர்ட் சட்க்ளிஃப் மற்றும் மார்க் ராம்பிரகாஸ் இருவருடன் சம நிலையில் இருக்கும் புஜாரா, ஒட்டுமொத்தமாக டான் பிராட்மேன் (37), வாலி ஹம்மண்ட் (36), பாட்ஸி ஹெண்ட்ரன் (22) ஆகியோருக்கு அடுத்து 4வது இடத்தில் நீடிக்கிறார்.

pujara

அதேபோல் ரஞ்சிக்கோப்பையில் 8வது இரட்டை சதத்தை பதிவுசெய்திருக்கும் புஜாரா, பராஸ் டோக்ராவுக்கு (9) பிறகு அதிகமுறை இரட்டை சதத்தை பதிவுசெய்த வீரராக மாறி அசத்தியுள்ளார்.