இந்தியா யு19 கேப்டன்கள் web
கிரிக்கெட்

முகமது கைஃப் முதல் உதய் சஹாரன் வரை... யு19 ஃபைனலுக்கு இந்தியாவை அழைத்துச் சென்ற கேப்டன்கள்!

2024 யு19 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. வருடம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் பைனலில் ஆஸ்திரேலியா அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

Viyan

அண்டர் 19 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. தென்னாப்பிரிக்காவை அரையிறுதியில் வீழ்த்தி ஒன்பதாவது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்திருக்கிறது இந்தியா. அதுவும் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஃபைனலுக்குள் நுழைந்திருக்கிறது.

இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் இந்தியா, வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதவிருக்கிறது. முகமது கைஃப், விராட் கோலி என பல ஸ்டார்கள் இந்தியாவை அண்டர் 19 தொடரில் வழிநடத்தியதால் பெயர் பெற்றவர்கள். உதய் சஹாரன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் ஆட்ட நாயகன் விருது பெறும் செயல்பாட்டைக் கொடுத்து அந்த வரிசையில் வந்து நிற்கிறார்.

இதற்கு முன் இந்தியாவை அண்டர் 19 உலகக் கோப்பை ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற கேப்டன்கள் யார்? ஒரு பார்வை...

முகமது கைஃப் - 2000

இலங்கையில் நடந்த அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை வழிநடத்தினார் முகமது கைஃப். யுவ்ராஜ் சிங், ரிதீந்தர் சோதி, அஜய் ராத்ரா, வேனுகோபால் ராவ் என இந்திய சீனியர் அணிக்கு பின்னர் விளையாடிய பல வீரர்கள் அந்த அணியில் இடம்பிடித்திருந்தார்கள்.

2000 U19 World Cup

இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. ஐசிசி கோப்பையைக் கையில் ஏந்திய அடுத்த இரு மாதங்களிலேயே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார் கைஃப். மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகளிலும், 135 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடினார் கைஃப்.

ரவிகாந்த் சுக்லா - 2006

மீண்டும் இலங்கையில் நடந்த தொடரில் ஃபைனலுக்கு முன்னேறியது ரவிகாந்த் சுக்லா தலைமையிலான இந்திய அணி. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கோப்பை உறுதி என்று நினைத்திருந்த நிலையில் வெறும் 71 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.

சடேஷ்வர் புஜாரா, ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா போன்ற வீரர்கள் இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடியிருந்தார்கள்.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ரவிகாந்த் சுக்லா இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு பெறவில்லை. உத்தரப் பிரதேச அணிக்காக ஆடியவர், அதன்பின் கோவாவுக்காக 2014 வரை ஆடினார்.

விராட் கோலி - 2008

யாரும் மறக்க முடியாத உலகக் கோப்பை தொடர் இது. மலேசியாவில் நடந்த இத்தொடரில் தென்னாப்பிரிக்க அணியை 12 ரன்கள் (DL முறைப்படி) வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா. சௌரப் திவாரி, மனீஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, அபினவ் முகுந்த், சித்தார்த் கௌல் போன்ற வீரர்கள் இத்தொடரில் இந்திய அணிக்கு விளையாடினார்கள்.

கேப்டன் விராட் கோலி அதன்பின் என்ன ஆனார், என்ன செய்தார் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!

உன்முக்த் சந்த் - 2012

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியான் பட்டம் வென்றது உன்முக்த் சந்த் தலைமையிலான இந்திய அணி. ஹனுமா விஹாரி, சந்தீப் ஷர்மா ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ஆடினார்கள்.

அடுத்த விராட் கோலி என்று கருதப்பட்ட உன்முக்த் சந்த், ஐபிஎல் அரங்கில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினார். டெல்லி அணிக்கும் பெரிதாக சோபிக்காத அவர், இப்போது அமெரிக்கா சென்று கிரிக்கெட் விளையாடிவருகிறார்.

இஷன் கிஷன் - 2016

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட, இஷன் கிஷன் தலைமையிலான இளம் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு ஃபைனலுக்கு சென்றது. ஆனால் வங்கதேசத்தில் நடந்த இத்தொடரின் பரபரப்பான ஃபைனலில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக தோற்றது இந்தியா.

ishan kishan

அந்தத் தொடரில் விளையாடிய ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், கலீல் அஹமது, ஆவேஷ் கான் ஆகியோர் இந்திய அணிக்கு விளையாடிவிட்டனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இப்போது சர்ஃபராஸ் கானும் இடம்பெற்றுவிட்டார். கேப்டன் இஷன் கிஷன் இந்தியாவுக்காக மூன்று ஃபார்மட்டிலுமே ஆடிவிட்டார்.

பிரித்வி ஷா - 2018

நியூசிலாந்தில் நடந்த தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. 2018-2021 காலகட்டம் வரை இந்தியாவுக்காக அனைத்து ஃபார்மட்டிலும் அறிமுகமாக விளையாடினார் பிரித்வி ஷா. ஆனால் அதன்பிறகு பல பிரச்சனைகள் காரணமாக அவர் இப்போது இந்திய அணிக்கான விவாதத்திலேயே இல்லை.

2018 U19 World Cup

அதேசமயம் சுப்மன் கில் இப்போது அனைத்து ஃபார்மட்டிலும் இந்திய அணிக்கு விளையாடிக்கொண்டிருக்கிறார். அபிஷேக் ஷர்மா, ரியான் பராக் போன்ற வீரர்கள் ஐபிஎல் அரங்கில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

பிரியம் கார்க் - 2020

தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடரில் பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி ஃபைனலில் தோற்றது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளில் தோற்றது இந்தியா. டெல்லி கேபிடல்ஸ் அணியில் வாய்ப்பு பெற்ற கார்க், அதைத் தக்கவைத்துக்கொள்ளவில்லை.

அதேசமயம் யஷஷ்வி ஜெய்ஸ்வால், ரவி பிஷ்னாய், திலக் வர்மா என இத்தொடரில் ஆடிய வீரர்கள் இந்திய அணிக்கு அறிமுகம் ஆகிவிட்டார்கள். துருவ் ஜுரெல் கூட டெஸ்ட் ஸ்குவாடில் இடம்பெற்றுவிட்டார்.

யாஷ் தூல் - 2022

வெஸ்ட் இண்டீஸில் நடந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரின் கேப்டன் யாஷ் தூல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள். ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர், நிஷாந்த் சிந்து, ராஜ் அங்கத் பவா ஆகியோர் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெற்றுவிட்டார்கள்.