இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா முகநூல்
கிரிக்கெட்

"எந்தக் காரணத்துக்காகவும் இந்த அணுகுமுறை மாறப்போவதில்லை" - இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் தைரியமான அட்டாக்கிங் அணுகுமுறை எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்தவொரு காரணத்துக்காகவும் மாறாது என்று கூறியிருக்கிறார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா.

Viyan

இந்திய அணியின் தைரியமான அட்டாக்கிங் அணுகுமுறை எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்தவொரு காரணத்துக்காகவும் மாறாது என்று கூறியிருக்கிறார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோற்ற பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவின் இந்த அணுகுமுறை குறித்து தான் பெருமைப்படுவதாகக் கூறினார். என்னதான் இந்தியா தோற்றிருந்தாலும், பல சிறந்த விஷயங்கள் இந்தப் போட்டியில் நடந்திருப்பதாகவும் தெரிவித்தார் அவர்.

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சியளித்த இந்தியா, அதன்பிறகு சிறப்பான கம்பேக் கொடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் சதமடிக்க, ரோஹித், பண்ட், கோலி ஆகியோரின் அரைசதங்களால் மீண்டு வந்தது மென் இன் புளூ. அந்த அணுகுமுறை பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதைத்தான் பத்திரிகையாளர் சந்திப்பில் பெருமையாகப் பேசினார் ரோஹித்.

"உண்மையைச் சொல்லவேண்டுமெனில் நான் இந்தப் போட்டியைப் பற்றி அதிகம் அலசி ஆராயப்போவதில்லை. 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அந்த சில மணி நேரங்கள் இந்த அணி எப்படிப்பட்டது என்பதை சொல்லிவிடப்போவதில்லை. அந்த 3 - 4 மணி நேரங்கள் தவிர்த்து இந்தப் போட்டியிலும் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. இந்த அணிக்கு நாங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்க ஆசைப்படும் விஷயம் ஒன்றுதான். அது,

எந்த விதமான நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டாலும், எப்படி முடியுமோ அந்த வகையில் கம்பேக் கொடுக்க முயற்சி செய்யவேண்டும்.

அதைப் பற்றித்தான் நாங்கள் அதிகம் பேசுகிறோம்.

இந்தப் போட்டியில் நாங்கள் அப்படி ஒரு கம்பேக் கொடுப்பதற்கான வழியையும் இரண்டாவது இன்னிங்ஸ் பிடித்தோம். ஆம், நாங்கள் இந்தப் போட்டியை தோற்றிருக்கிறோம். அதனால் நான் சொல்வது அவ்வளவு பெரிய விஷயமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே பல அற்புதமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. அதனால் அணிக்குள் சூழ்நிலையை அமைதியாக வைத்திருக்கவேண்டும். யாரையும் பதற்றப்படுத்தாமல் இருப்பது முக்கியம்" என்று கூறினார் இந்திய கேப்டன்.

மேலும் பேசிய அவர், "அப்படியொரு மோசமான நிலையில், பெருமளவு பின்தங்கியிருக்கும்போது நம்பிக்கையை இழந்துவிடுவது எளிதாக நடந்துவிடும். ஆனால் இந்த அணி அப்படிப்பட்டது இல்லை. எதிரணிக்கு அவ்வளவு எளிதாக வாய்ப்புகள் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக கடைசி வரை போராடும் அணி இது. ஆட்டத்தின் முதல் நாள் எங்களுக்கு சாதகமாக செல்லவில்லை. 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனோம், அவர்கள் 180/3 என இருந்தார்கள். அடுத்த நாள் ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. ரவீந்திரா - சௌத்தி பார்ட்னர்ஷிப் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் ஆடியது.

ரோஹித் ஷர்மா

ஆனால் நாங்கள் அதனால் துவண்டு விடவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் விளையாடிய விதம் ஒருகட்டத்தில் நாம் முன்னிலையில் இருக்கிறோம் என்ற உணர்வைக் கொடுத்தது. 350 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் இருந்த ஒரு அணியைப் போல் ஆடவில்லை. அதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்றார்.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் பற்றிப் பெருமையாகப் பேசிய ரோஹித், "வீரர்கள் பேட்டிங்கில் அப்படியொரு செயல்பாட்டைக் கொடுக்கும்போது, அவர்களின் மனநிலை என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் சுதந்திரமாக எந்த நெருக்கடியையும் உணராமல் விளையாடுகிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக முதல் சில மணி நேரங்களைத் தவிர இந்தப் போட்டியில் நாங்கள் சிறப்பாகவே விளையாடியிருக்கிறோம்.

ரோஹித் ஷர்மா

ஆட்டத்தில் பின்தங்கியிருக்கும்போது தான் நீங்கள் இன்னும் தீவிரமாக விளையாடவேண்டும். ஒரு தாக்கம் ஏற்படுத்தவேண்டும். நீங்கள் நெருக்கடியை உணர்கிறீர்கள் என்று எதிரணி உணராத வகையில் செயல்படவேண்டும். பின்தங்கியிருக்கும்போது நீங்கள் அசாத்தியமான விஷயங்களை எந்தவித பயமும் இல்லாமல் செய்யவேண்டும். அதை சொல்வது ஒரு விஷயம். ஆனால் அந்த பயம் இல்லாத ஆட்டத்தை வெளிப்படுத்துவது, செய்து காட்டுவது முக்கியமான ஒன்று. 350 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையிலும் நம் வீரர்கள் ஆடிய ஒருசில ஷாட்களைப் பார்த்தபோது நாம் பேசுவதை அவர்கள் களத்தில் செய்துகாட்டத் துணிகிறார்கள் என்பது புரிகிறது. அது இங்கு தொடரப்போகிறது" என்று கூறினார்.

மேலும், இந்த அனுகுமுறை எப்போதுமே தொடரப்போகிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார் ஹிட்மேன். "ஆட்டத்தில் நாம் பின்தங்கி இருந்தாலும், எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும் என்ற உத்வேகத்தோடு இந்த ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்துவோம். ஒருவேளை நாம் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் இந்த அணுகுமுறையானது எந்தக் காரணத்துக்காகவும் மாறப்போவதில்லை. சமீபத்தில் நடந்த சில போட்டிகள் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே இருக்கின்றன. இனி எல்லாம் இப்படித்தான் இருக்கப்போகிறது.

ரோஹித் ஷர்மா

நாங்கள் எப்போதும் டெஸ்ட் போட்டியை தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் இந்த அணுகும்முறையை மாற்றப்போவதில்லை. இந்த மனநிலையை தொடர்ந்து வெளிப்படுத்த விரும்புகிறோம். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளை எப்படியேனும் வெற்றி பெற முயற்சிப்போம்" என்று கூறினார் ரோஹித் ஷர்மா.