நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கதேசத்துக்கான அணியிலிருந்து பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றாலும், இந்தத் தொடருக்கு ஜஸ்ப்ரித் பும்ரா துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும் 4 வீரர்கள் ரிசர்வ் பிளேயர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அணியில் 8 பேட்டர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 4 ஸ்பின்னர்கள் இந்த அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்த அணியில் வங்கதேச தொடரில் இடம்பெற்றிருந்த 16 வீரர்களில் 15 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். அந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெற்றிருந்த யஷ் தயால் மட்டும் இந்த அணியில் இடம்பெறவில்லை. அறிவிக்கப்பட்டிருக்கும் 4 வீரர்கள் அடங்கிய ரிசர்வ் பட்டியலிலும் அவர் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளரை இந்திய அணி பிரதானப்படுத்தும் என்று நினைத்திருந்த நிலையில், அவர் இடம்பெறாதது ஒரு சிலருக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய ஆகாஷ் தீப் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக அணியில் தன் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். காயத்திலிருந்து முகமது ஷமி மீண்டு வருவாரா என்று நினைத்திருந்த நிலையில், அவர் இந்த அணியில் இடம்பெறவில்லை. அதேசமயம், பிரசித் கிருஷ்ணா, மயாங்க் யாதவ், ஹர்ஷித் ராணா ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். போக, ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டியும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். மயாங்க், நித்திஷ் இருவரும் வங்கதேசத்துக்கான சர்வதேச டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகம் கண்டனர்.
இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரித் பும்ரா (துணைக் கேப்டன்), யஷஷ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
இந்த அணி அறிவிக்கப்பட்ட பிறகு அதிகம் பேசப்படும் விஷயம், ஜஸ்ப்ரித் பும்ரா துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பது. அனைத்து ஃபார்மட்களிலும் இந்திய அணியின் துணைக் கேப்டன்கள் தொடர்ந்து மாற்றப்பட்டுவந்திருந்த நிலையில், இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருந்தது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி யாரையுமே துணைக் கேப்டனாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவது சந்தேகம் என்ற செய்தி கடந்த சில நாள்களாக பேசப்பட்டுவருகிறது. அப்படி நடந்தால் யார் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்ற கேள்வி வந்த நிலையில் இப்போது பும்ரா துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பது அதற்கு பதில் கொடுத்திருக்கிறது. பும்ரா ஏற்கெனவே இந்தியாவை இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் வழிநடத்தியிருக்கிறார்.
ரிசர்வ் பிளேயர்கள்: மயாங்க் யாதவ், ஹர்ஷித் ராணா, நித்திஷ் குமார் ரெட்டி, பிரஷித் கிருஷ்ணா
இந்தியா vs நியூசிலாந்து அட்டவணை
முதல் டெஸ்ட் - அக்டோபர் 16 - பெங்களுரு
இரண்டாவது டெஸ்ட் - அக்டோபர் 24 - புனே
மூன்றாவது டெஸ்ட் - நவம்பர் 1 - மும்பை
இந்தத் தொடருக்கான நியூசிலாந்து அணியை டாம் லாதம் வழிநடத்துகிறார். அந்த அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக முதல் போட்டியில் ஆடப்போவதில்லை. ஆனால் அவர் கடைசி 2 போட்டிகளுக்கான அணியில் இணைந்துவிடுவார்.