bumrah X
கிரிக்கெட்

5வது டெஸ்ட் போட்டி: கே.எல்.ராகுல், வாசிங்டன் சுந்தர் விலகல்; மீண்டும் அணிக்கு திரும்பிய பும்ரா!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஒரு வரலாற்று வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 1-0 என வெற்றிகரமாக தொடங்கியது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் கம்பேக் கொடுத்த இந்திய அணி அபாரமான வெற்றியை பதிவுசெய்தது. இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் ஆகியோரது அட்டகாசமான ஆட்டத்தால் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்தியா 2-1 என தொடரில் முன்னிலை பெற்றது.

அதைத்தொடர்ந்து 4வது டெஸ்ட் போட்டியில் நல்ல நிலைமையில் இருந்த இங்கிலாந்து அணியிடமிருந்த போட்டியை, இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் அபாரமான ஆட்டத்தால் தட்டிப்பறித்தார். 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இருந்த இந்திய அணியை தன்னுடைய 90 ரன்கள் ஆட்டத்தால் 307 ரன்களுக்கு எடுத்துவந்து கலக்கிப்போட்டார். மீதியை இந்திய ஸ்பின்னர்கள் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் பார்த்துக்கொள்ள இங்கிலாந்தின் பாஸ்பாலுக்கு எதிராக 4வது டெஸ்ட் போட்டியையும் வென்றுள்ள இந்திய அணி, 3-1 என தொடரை வென்று அசத்தியுள்ளது.

gill - jurel

இந்நிலையில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 7ம் தேதி முதல் மார்ச் 11ம் தேதிவரை 5வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.

மீண்டும் கம்பேக் கொடுத்த பும்ரா! காயத்தால் ராகுல் விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பிசிசிஐ அறிவிப்பின்படி “கேஎல் ராகுல் காயத்தாலும், வாசிங்டன் சுந்தர் ரஞ்சிக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் பங்கேற்பதாலும் 5வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுகின்றனர்” எனக் கூறப்பட்டுள்ளது. மார்ச் 2ம் தேதி நடக்கவிருக்கும் மும்பை - தமிழ்நாடு போட்டியில் விளையாடவிருக்கும் வாசிங்டன் சுந்தர், தேவைப்பட்டால் 5வது டெஸ்ட் போட்டியின் பாதியில் கூட இணைவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ind vs eng

முகமது ஷமிக்கு கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும், விரைவில் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை பெறுவதற்கு இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது. 4வது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். தொடரை வென்றுவிட்ட நிலையில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Mukesh Kumar | Rohit Sharma

5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (WK), கேஎஸ் பாரத் (WK), தேவ்தத் படிக்கல், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.