இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரானது 5 போட்டிகளாக நடத்தப்பட உள்ள நிலையில், அதன்மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள ரோகித் தலைமையிலான இந்திய அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவிருக்கிறது.
கடந்த 10 ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடரையும் வென்றுள்ள இந்திய அணி, மூன்றாவது முறையும் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் களம்காண உள்ளது. ஆனால் சொந்த மண்ணில் இன்னொரு டெஸ்ட் தொடரை இழக்க ஆஸ்திரேலியா அணி தயாராக இல்லை.
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்த நிலையில், முதல் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, இந்திய கேப்டன் ரோகித் சர்மா பெர்த்தில் நடக்கவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த அப்டேட் மூலம், இந்தியாவை அந்த போட்டியில் யார் வழிநடத்தப்போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதனால் புதிய டெஸ்ட் துணை கேப்டன் யாராக இருக்கப்போகிறார் என்ற தேர்வு அதிகப்படியான முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த விசயத்தில் அனுபவம் வாய்ந்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் முதலிய வீரர்கள் இருந்தாலும், இந்திய தேர்வுக்குழுவானது இந்த ஒரு போட்டிக்கு மட்டுமில்லாமல், நீண்ட காலத்திற்கு துணை கேப்டனாக இருக்கப்போகிறவர் மீது கவனம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
cricinfo வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, இந்திய அணியின் அடுத்த துணை கேப்டனுக்கான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சுப்மன் கில் இருவரும் இருப்பதாகவும், இருவரில் ஒருவரை துணை கேப்டனாக தேர்ந்தெடுப்பதில் இந்திய நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வழிநடத்தியுள்ள நிலையில், சுப்மன் கில் ஒருபோட்டியில் கூட அணியை வழிநடத்தியதில்லை. இருப்பினும் இந்த இரண்டு வீரர்களில் ஒருவர் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியாவை வழிநடத்தவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.