T10 - BCCI web
கிரிக்கெட்

டி10 போட்டிகளை நடத்தும் திட்டத்தில் பிசிசிஐ! அப்படினா ஐபிஎல்-ன் எதிர்காலம் - விவரம் என்ன?

50 ஓவர் போட்டிகள் சுருங்கி டி20 போட்டிகளான நிலையில், தற்போது டி20 போட்டிகள் சுருங்கி டி10 போட்டிகளாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெளிநாடுகளில் ஹிட்டடித்த டி10 தொடரையும் இந்தியாவில் கொண்டுவர பிசிசிஐ திட்டம் வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Rishan Vengai

நீண்ட நேரம் அமர்ந்து முடிவுக்காக காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்கள், விறுவிறுப்பாக சென்று விரைவாகவே முடிவுகளை அறியும் டி20 போட்டிகளை அதிகளவில் ரசித்து வருகின்றனர். அதனால் தான் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடர் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டடித்தது. ஐபிஎல்லுக்கு பிறகு தான் பல டி20 லீக்குகள் உலகமெங்கும் உயிர்ப்பெறத்தொடங்கின. அப்படி உயிர்ப்பெற்ற குறுகிய வடிவ லீக் போட்டிகளில் டி10 போட்டிகள் அனைவரிடமும் கவனம் ஈர்த்துள்ளன.

பிசிசிஐ

இந்நிலையில் தான் ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் கென்யா போன்ற நாடுகளில் ஹிட்டடித்த டி10 தொடரையும் இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்தில் பிசிசிஐ இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் லீக் பாதிக்கப்படாதவகையில் நடத்த திட்டம்!

டி20 தொடர்களை தாண்டி தற்போது டி10 தொடர்களிலும் வீரர்கள் பங்கேற்க ஆர்வம் காட்டிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் டி10 தொடர்களை அதிகளவில் நடத்தி கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் இணைத்து, அதிக உலக நாடுகளையும் கிரிக்கெட்டில் இணைக்கும் வேலையை செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தான் பிசிசிஐயும் டி10 தொடர் மீது கவனம் செலுத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல்

வெளியாகியிருக்கும் தகவல்களின் படி, “ டி10 தொடரை நடத்தும் பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு விளம்பரதாரர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் டி10 தொடரை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும், ஐபிஎல்லை போன்றே ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் நடத்தவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் இந்த தொடர் ஐபிஎல்லை பாதிக்காதவகையில், TIER-2 போட்டிகளாகவோ அல்லது வயது வரம்பை நிர்ணயித்து ஐபிஎல்-ன் நட்சத்திர வீரர்கள் பங்கேற்காத வகையிலோ விதிகள் வகுத்து நடத்தப்பட உள்ளதாகவும்” தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இன்னும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பிசிசிஐ தரப்பு வெளியிடவில்லை. இது எந்தளவு ஆரோக்கியமானது என்ற கருத்தையும் ரசிகர்கள் வைத்துவருகின்றனர்.