kapil dev web
கிரிக்கெட்

புற்றுநோயுடன் போராடும் சகவீரர்.. கபில்தேவ் வைத்த உருக்கமான கோரிக்கை! 1 கோடி வழங்க பிசிசிஐ முடிவு!

இந்திய அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், அவருடைய சிகிச்சைக்கு உதவுமாறு பிசிசிஐ-க்கு கபில்தேவ் கோரிக்கை வைத்திருந்தார்.

Rishan Vengai

முன்னாள் இந்திய வீரரான அன்ஷுமன் கெய்க்வாட், 1975 முதல் 1987 வரை இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 30 சராசரியுடன் 11 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களை பதிவுசெய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 201 ஆகும்.

அன்ஷுமன் கெய்க்வாட்

முதல்தர கிரிக்கெட்டில் தன்னுடைய அபாரமான ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் அன்ஷுமன், 206 போட்டிகளில் 34 சதங்கள் மற்றும் 47 அரைசதங்களும், ஆஃப் ஸ்பின்னராக 143 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். பல்வேறு நிலைகளில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ள அன்ஷுமன், தற்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியானது.

உலகக்கோப்பை கேப்டனின் உருக்கமான கோரிக்கை!

ரத்த புற்றுநோயுடன் போராடும் அன்ஷுமன் கெய்க்வாட்டை நேரில் சென்று பார்த்த சந்தீப் பாட்டீலிடம் சிகிச்சைக்கு உதவுமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதனை கேள்விப்பட்ட முன்னாள் கேப்டன் கபில்தேவ் மிகுந்த மனவேதனையுடன் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

சகவீரரான அன்ஷுமன் கெய்க்வாட் குறித்து பேசியிருக்கும் கபில்தேவ், “இது மனதை நோகடிக்கும் மிகவும் சோகமான செய்தி. நான் அன்ஷூவுடன் சேர்ந்து விளையாடிய காலங்களை நினைத்துபார்த்து மிகுந்த வலியுடன் இருக்கிறேன், இந்த நிலையில் அவரைப் பார்க்க முடியவில்லை.

அவர் விளையாடிய காலத்தில் சில அதிவேக பந்துவீச்சாளர்களுக்கு எதிராக களத்தில் நிற்கும்போது முகம் மற்றும் மார்பில் அடிவாங்கி விளையாடினார். நாம் அவருக்காக நிற்க வேண்டிய நேரம் இது. இந்திய ரசிகர்கள் அவரைத் தோற்கடிக்க விட மாட்டார்கள் என நம்புகிறேன், அவர் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவரை வாரியம் கவனித்துக்கொள்ளும் என நம்புகிறேன், அப்படி அவர்களால் முடியாத பட்சத்தில் நாங்கள் எங்கள் ஓய்வூதியத் தொகையை வழங்குகிறோம்” என வேதனையுடன் கூறியுள்ளார்.

1 கோடி வழங்க ஜெய் ஷா வலியுறுத்தல்!

கபில்தேவ் மற்றும் சந்தீப் பாட்டீல் ஆகியோர் கெய்க்வாடுக்கு உதவுமாறு வாரியத்தை வலியுறுத்தியதை அடுத்து பிசிசிஐ 1 கோடி வழங்க முடிவெடுத்துள்ளது.

க்றிக் இன்ஃபோ வெளியிட்டிருக்கும் தகவலின் படி, “புற்றுநோயுடன் போராடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு நிதியுதவி வழங்க உடனடியாக 1 கோடி ரூபாய் வழங்குமாறு பிசிசிஐக்கு ஜெய் ஷா உத்தரவிட்டுள்ளார். நிலைமையை ஆய்வு செய்து தொடர்ந்து ஆதரவை வழங்குவதற்காக கெய்க்வாட்டின் குடும்பத்தினரிடமும் ஷா பேசியுள்ளார். இந்த நெருக்கடியான நேரத்தில் கெய்க்வாட்டின் குடும்பத்திற்கு வாரியம் துணை நிற்கிறது. கெய்க்வாட் விரைவில் குணமடைய தேவையான அனைத்தையும் செய்யும்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.