தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே 2 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது.
முதலில் தொடங்கப்பட்ட டி20 தொடரில், முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டியை வென்ற அயர்லாந்து அணி முதல்முறையாக தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரையும் சமன்செய்து வரலாறு படைத்தது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கி நடைபெற்றுவந்தது. அதில் முதல் 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், 3வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்காவை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை வென்று 2-0 என தென்னாப்பிரிக்கா தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியானது அபுதாபியில் தொடங்கி நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பால்பிர்னி மற்றும் கேப்டன் ஸ்டிர்லிங் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் விளையாடிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தது. பால்பிர்னி 45 ரன்னில் வெளியேற, தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்டிர்லிங் 88 ரன்கள் மற்றும் ஹாரி டெக்டர் 60 ரன்கள் எடுத்து அசத்தினர். 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்களை எடுத்தது அயர்லாந்து அணி.
அதற்குபிறகு விளையாடிய தென்னாப்பிரிக்கா 46.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜேசன் ஸ்மித் 91 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் தொடரானது 2-1 என தென்னாப்பிரிக்காவின் பக்கம் முடிவடைந்தது.
3வது ஒருநாள் போட்டியின்போது தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் பயிற்சியாளர் ஜேபி டுமினி, அணி வீரர்களுக்கு மாற்றாக ஃபீல்டிங் செய்தது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. போட்டி நடைபெற்ற அபுதாபி மைதானத்தில் அதிகப்படியான வெப்பம் இருந்ததால், பெரும்பாலான தென்னாப்பிரிக்கா வீரர்கள் சோர்வடைந்ததால் சில நிமிடங்கள் பயிற்சியாளர் ஜேபி டுமினி ஃபீல்டிங் செய்தார்.
40 வயதான ஜேபி டுமினி 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். சில நிமிடங்கள் தான் ஃபீல்டிங் செய்தாலும், பந்தை தாவி பிடித்த அவருடைய எஃபர்ட் எல்லோருடைய கவனத்தையும் பெற்றது.
இருப்பினும் பயிற்சியாளர் எப்படி சர்வதேச போட்டியில் ஃபீல்டிங் செய்யமுடியும் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.