mushfiqur rahim handling ball out Twitter
கிரிக்கெட்

பேட்டிங்கின் போது பந்தை கையால் பிடித்து தடுத்த வங்கதேச வீரர்! வித்யாசமான முறையில் விழுந்த விக்கெட்!

வங்கதேச வீரர் முஸ்ஃபிகுர் ரஹிம் பந்தை கையில் பிடித்து அவுட்டாகி வெளியேறிய சம்பவம் வைரலாகி வருகிறது.

Rishan Vengai

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. ஒருநாள் தொடரை 2-0 என நியூசிலாந்து வெற்றிபெற்ற நிலையில், டெஸ்ட் தொடரில் வங்கதேசம் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்துவருகிறது.

ban vs nz

இந்நிலையில், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது அதிக கவனம் பெற்றுவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றி வங்கதேச அணி, வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்து அணியை வங்கதேசத்தில் வைத்து டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை பதிவுசெய்து அசத்தியது.

ban vs nz

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியை 172 ரன்னுக்கு ஆல் அவுட்டாக்கிய நியூசிலாந்து கெத்துகாட்டியது. எப்படியும் இந்த போட்டியில் நியூசிலாந்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பந்துவீச்சில் மிரட்டிவரும் வங்கதேச அணி 50 ரன்னுக்குள் நியூசிலாந்தின் 5 விக்கெட்டுகளை தட்டித்தூக்கி மிரட்டி வருகிறது. இந்த போட்டியில் வங்கதேச நட்சத்திர வீரர் முஸ்ஃபிகுர் ரஹிம் அவுட்டாக் வெளியேறிய விதம் வைரலாகி வருகிறது.

பந்தை கையால் பிடித்து வெளியேறிய முஸ்ஃபிகூர் ரஹிம்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 47 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த முஸ்ஃபிகுர் ரஹிம் மற்றும் ஷாஹத் ஹொஸ்ஸைன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை எடுத்துச்சென்றனர். 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி நல்ல டச்சில் இருந்த முஸ்ஃபிகுர் ரஹிம் வங்கதேசத்தை 100 ரன்களுக்கு எடுத்துச்சென்றார். அப்போது தான் அந்த விக்கெட் அரங்கேறியது.

41வது ஓவரை வீச வந்த கைல் ஜேமிசன் 4வது பந்தில் ஒரு லெந்த் பாலை வீசினார். அதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திய முஸ்ஃபிகுர் ரஹிம், ஒரு கணம் அவரையே மறந்து பந்தை கையில் பிடித்து தள்ளிவிட்டார். அது நிச்சயம் முஸ்ஃபிகுரின் மூளை மங்கலான தருணமாக இருந்தது, காரணம் பந்தானது ஸ்டம்புகளை நோக்கி கூட செல்லவில்லை. எங்கேயோ 5வது ஸ்டம்பில் சென்ற பந்தை முஸ்ஃபிகுர் கையால் தள்ளிவிட, நியூசிலாந்து அணி அதை அம்பயரிடம் அப்பீல் செய்தது. பந்தை கையால் தட்டிவிட்டு ஃபீல்டிங்கை பாதித்ததற்காக முஸ்ஃபிகுர் ரஹிமிற்கு அவுட் வழங்கப்பட்டது. இதுபோலான ஒரு விக்கெட் மூலம் வெளியேறும் முதல் வங்கதேச வீரர் என்ற மோசமான வரலாற்றை எழுதியுள்ளார் முஸ்ஃபிகுர் ரஹிம்.

கடந்த 22 வருடங்களில் இதுபோன்ற முறையில் அவுட்டாகும் முதல் வீரர் ரஹிம் ஆகும். இதற்கு முன் 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாஹ் மற்றும் இங்கிலாந்தின் மைக்கேல் வாகன் போன்ற வீரர்கள் அவுட்டாகி உள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கை வீரர் மேத்யூஸ் களத்திற்கு வந்து தாமதமாக பேட்டிங்கை தொடங்கியதற்காக ஆட்டமிழந்தார். இதுபோன்று பல வித்தியாசமான முறையில் ஆட்டமிழப்புகள் செய்யப்படுகின்றன.