Avishka Fernando - Kusal Mendis  cricinfo
கிரிக்கெட்

’23 ஆண்டுக்கு பின் முதல்முறை..’ NZ-க்கு எதிராக 2 இலங்கை வீரர்கள் சதம் விளாசல்! 324 ரன்கள் குவிப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர்கள் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டீஸ் இருவரும் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர்.

Rishan Vengai

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 2 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது.

முதலில் தொடங்கப்பட்ட 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் இலங்கையும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றதால் தொடர் 1-1 என சமன்செய்யப்பட்டது.

nz vs sl

இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான முதல் போட்டி இலங்கையில் உள்ள தம்புளா மைதானத்தில் நடந்துவருகிறது. முதலில் பேட்டிங் செய்திருக்கும் இலங்கை அணி அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டீஸ் இருவரின் அசத்தலான சதத்தால் 324 ரன்கள் குவித்துள்ளது.

சதமடித்த 2 வீரர்கள்.. 324 ரன்கள் குவித்த இலங்கை!

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்கவீரர் பதும் நிஷாங்கா 12 ரன்னில் வெளியேற, 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டீஸ் இருவரும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர்.

9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 100 ரன்கள் அடித்தபோது பெர்னாண்டோ வெளியேற 206 ரன்கள் பார்ட்னர்ஷிப்பானது முடிவுக்கு வந்தது. நியூசிலாந்துக்கு எதிராக ஒரு விக்கெட்டுக்கு இலங்கை அணியின் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது.

அதனைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய குசால் மெண்டீஸ் 17 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 143 ரன்கள் இருந்தபோது அவுட்டாகி வெளியேறினார். அதற்கு அடுத்துவந்த வீரர்களும் அதிரடியாக விளையாட 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் குவித்துள்ளது இலங்கை அணி. 49.2வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் மீதமுள்ள 4 பந்துகள் வீசப்படாமல் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

23 ஆண்டுகளுக்கு பிறகு அசத்தலான சாதனை..

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரே போட்டியில் இரண்டு இலங்கை வீரர்கள் சதமடிப்பது 23 ஆண்டுகளுக்குபிறகு இதுவே முதல்முறை.

avishka - kusal

இதற்கு முன் 2001-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜெயசூர்யா (107) மற்றும் ஜெயவர்த்தனே (116) இருவரும் சதமடித்திருந்தனர்.