மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய இளம்வீரர் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் 200+ ரன்களைக் குவித்துள்ளது.
இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்ஸருடன் 123 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி20யில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார்.
உண்மையில், நவம்பர் 28ஆம் தேதி ருதுராஜ் கெய்க்வாட்க்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டும் இதே தேதியில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட், உத்தரப்பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 43 ரன்களை விளாசி சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கடினமாக இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க பேட்டர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் ஆரோன் ஹார்டி ஆகியோர் தொடக்கம் முதலே சற்று அதிரடி காட்டினர். ஆனாலும் ஆரோன் 16 ரன்களிலும் டிராவிஸ் ஹெட் 35 ரன்களிலும் வெளியேற்றப்பட்டனர். பின்னர்வந்த ஜோஸ் இங்கிலிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கிளன் மேக்ஸ்வெல் மறுமுனையில் நின்று பட்டையைக் கிளப்பினார். தனியொருவனாக நின்று ஜொலித்த மேக்ஸ்வெல் செஞ்சுரி அடித்ததுடன், அணியையும் வெற்றிபெற வைத்தார்.
அவர் 48 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்ஸருடன் 104 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் வேடு அவருக்கு துணையாக 28 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், தொடரில் இந்தியா 2 வெற்றிகளுடனும் ஆஸ்திரேலியா 1 வெற்றியுடனும் உள்ளது. தோல்விக்கு மிக முக்கியக் காரணம், பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவர். அவர் அனைத்துப் பந்துகளையும் பேட்டுக்கே வீசினார். ஒரு பந்தைக்கூட யார்க்கராக வீசாததால் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது.