Usman Khawaja Twitter
கிரிக்கெட்

ஆபாசமாக திட்டிய பவுலர்; 5 நாட்கள் களத்தில் நின்ற தீரம் - 43 வருடத்திற்கு பிறகு சாதனை படைத்த கவாஜா!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 5 நாட்களிலும் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா.

Rishan Vengai

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரானது பல்வேறு சுவாரசியங்களுக்கு இடையில் விறுவிறுப்பான ஒரு தொடராக மாறியுள்ளது. முதல் போட்டியிலேயே உயிரை கொடுத்து விளையாடிய இரண்டு அணிகளும் மறக்கமுடியாத ஒரு போட்டியை விருந்தாக கொடுத்துள்ளன.

வெற்றிக்காக இறுதிவரை போராடிய இரண்டு அணிகளும் தங்களுடைய முழு பலத்தையும் வெளிப்படுத்தி போராடின. போட்டியின் கடைசிபந்துவரை போராடிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை விட கூடுதலாக சிறப்பாகவே விளையாடியது என்று சொல்லலாம். ஆனால் அந்த அணியின் வெற்றிக்கு தடையாக இருந்தது உஸ்மான் கவாஜா என்ற ஒரேயொரு ஆஸ்திரேலிய வீரர் மட்டும் தான்.

ஆபாச வார்த்தையால் திட்டிய இங்கிலாந்து பவுலர் ராபின்சன்!

முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 393/8 என்ற நிலையில் முதல் நாளிலேயே டிக்ளார் செய்து, அதிரடியான அணுகுமுறைக்கு ஆஸ்திரேலிய அணியை தள்ளியது. இப்படி ஒரு நகர்த்தலை இங்கிலாந்து அணி செய்யும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை, கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளியதாகவே இருந்தது. தற்போது எப்படி விளையாட வேண்டும் என்று குழம்பிய நிலையில் இங்கிலாந்து அணியின் வியூகத்தை உடைத்தார் உஸ்மான் கவாஜா.

ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 2 பந்துகளில் 2 விக்கெட்டை கைப்பற்றிய ஸ்டூவர்ட் பிராட் ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை நிலைகுலைய வைத்தார். வார்னர், லபுசனே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் என மூன்று ஸ்டார் பேட்டர்களும் அடுத்தடுத்து அவுட்டாக 67 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் என்னதான் ஒருபுறம் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபுறம் நங்கூரமிட்டு நின்ற கவாஜா இங்கிலாந்து அணியின் மீது அழுத்தம் போட்டார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், இங்கிலாந்தின் வியூகங்களை எல்லாம் சுக்குநூறாக தகர்த்தெறிந்தார். முதல் நாள், 2ஆவது நாளை கடந்து 3ஆவது நாளிலும் அற்புதமாக விளையாடிய கவாஜா, சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

இந்நிலையில் 372 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இருந்த போது 113ஆவது ஓவரை வீச வந்த ராபின்சன், கவாஜாவை போல்டாக்கி வெளியேற்றி நிம்மதி பெருமூச்சுவிட வைத்தார். தன்னுடைய முதல் ஹோம் ஆஷஸ் தொடரில் விளையாடிய ராபின்சன், கவாஜாவின் பெரிய விக்கெட்டை எடுத்த உணர்ச்சி பெருக்கில் ஆபாச வார்த்தைகளை உதிர்த்தார். அவருடைய அந்த அணுகுமுறை அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ராபின்சன் அசிங்கமாக பேசிய போதும் எதுவும் பேசாமல் 141 ரன்கள் அடித்து வெளியேறினார் கவாஜா. அவர் அவுட்டாகி சென்ற பிறகு வெறும் 14 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி. அப்படியானால் எந்தளவு கவாஜா இங்கிலாந்துக்கு தடையாக இருந்தார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

43 வருடங்களுக்கு பிறகு 5 நாட்களாக பேட்டிங் செய்து கெத்து காட்டிய கவாஜா!

முதல் இன்னிங்ஸில் 386 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்டாக, 2வது இன்னிங்ஸில் 273 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு 281 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா நல்ல தொடக்கத்தை அமைத்தாலும் முக்கியமான நேரத்தில் எல்லாம் விக்கெட்டுகளை சாய்த்த இங்கிலாந்து அணி மீண்டும் போட்டிக்குள் வந்தது. லபுசனே, ஸ்மித் என முக்கிய வீரர்கள் இந்த முறையும் நடையை கட்ட, கடந்த இன்னிங்ஸில் கைக்கொடுத்த டிரவிஸ் ஹெட்டும் 16 ரன்னில் வெளியேறினார். இந்நிலையில் இந்தமுறையும் களத்தில் நிலைத்து நின்ற கவாஜா இங்கிலாந்து அணிக்கு பெரிய தொந்தரவாக இருந்தார்.

143 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நிலைத்து நின்ற கவாஜா, அரைசதம் அடித்து ஆஸ்திரேலியாவை 200 ரன்களை கடந்து அழைத்துச்சென்றார். முடிவில் கவாஜாவின் அற்புதமான பேட்டிங்கால் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றிபெற்றது. இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணிக்கு 141 ரன்கள், 65 ரன்கள் என விளாசி தனியாளாக தோல்வியை பரிசளித்தார் கவாஜா. முதல் நாள் தொடங்கி கடைசி நாளான 5ஆவது நாள் வரை, ஒரு டெஸ்ட் போட்டியின் அனைத்து நாளிலும் பேட்டிங் செய்த கவாஜா ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்து காட்டினார். முதல் இன்னிங்ஸில் 321 பந்துகள், இரண்டாவது இன்னிங்ஸில் 197 பந்துகள் என மொத்தம் 518 பந்துகளை சந்தித்து 796 நிமிடங்களில் அவர் களத்தில் நின்றுள்ளார்.

1980ஆம் ஆண்டுக்கு பிறகு 43 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியின் 5 நாட்களிலும் விளையாடிய இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார் கவாஜா. அதுமட்டுமல்லாமல் 5 நாட்கள் பேட்டிங் செய்த வீரர்கள் பட்டியலில் கவாஜா 13ஆவது வீரராவார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் அசிங்கமாக ஆபாச வார்த்தையால் திட்டியபோதும், இறுதிவரை போராடிய கவாஜா இங்கிலாந்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.