Australia Twitter
கிரிக்கெட்

சோக முகமாக வெளியேறும் வீரர்கள்! கண்ணீர் விடும் ரசிகர்கள்! சாம்பியன் அணியான ஆஸிக்கு என்னாச்சு?

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பையில் தொடர்ந்து 2 போட்டிகளில் மோசமாக செயல்பட்டு வருகிறது ஆஸ்திரேலிய அணி.

Rishan Vengai

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் 5 முறை கோப்பையை வென்ற அணியாக வலம்வரும் ஆஸ்திரேலிய அணி, நடப்பு 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகின்றது. சொதப்புகின்றது என்றால் சாதரணமாக இல்லை, வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் சுலபமாக விக்கெட்டுகளை விட்டு வெளியேறுகின்றனர். இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் 199 ரன்களுக்கே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வார்னர் மற்றும் ஸ்மித்தை தவிர வேறு எந்த வீரர்களும் பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அந்த அணி படுமோசமாக சொதப்பி வருவது ஆஸ்திரேலிய ரசிகர்களை கண்ணீர் சிந்தும் அளவுக்கே செல்லவைத்துள்ளது.

6 கேட்ச்களை தவறவிட்டு மோசமான பீல்டிங் செய்த ஆஸி!

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி தொடக்க வீரர் டிகாக் மற்றும் எய்டன் மார்கரம் இருவரின் அற்புதமான ஆட்டத்தால் 311 ரன்கள் குவித்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிகாக் இந்தப் போட்டியிலும் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். கடந்த இலங்கைக்கு எதிரான போட்டியிலும் சதத்தை பதிவு செய்திருந்த நிலையில், தொடர்ச்சியாக இரண்டாவது உலகக்கோப்பை சதத்தையும் பதிவுசெய்துள்ளார். மிடில் ஆர்டரில் வந்த மார்கரம் கடந்த போட்டியில் சதம்விளாசிய கையோடு, இந்த போட்டியில் 56 ரன்களை குவித்து அசத்தினார். 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்களை சேர்த்தது தென்னாப்பிரிக்கா அணி.

AUS vs SA

என்ன தான் தென்னாப்பிரிக்கா அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், அந்த அணியை இவ்வளவு ரன்களுக்கு வழிவிட்டதே ஆஸ்திரேலியாவின் மோசமான பீல்டிங் என்றுதான் சொல்ல வேண்டும். ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தமாக 5 கேட்ச்களை தவறவிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எளிதாக ரன்களை விட்டுக்கொடுத்தனர். கம்மின்ஸ், ஸ்டார்க், ஷாம்பா, ஸ்டொய்னிஸ், ஜோஸ் இங்க்லீஸ் என அனைத்து வீரர்களும் கைக்கு எளிதான கேட்ச்களை கூட தவறவிட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினர். ஒருவேளை ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த 6 கேட்ச்களையும் பிடித்திருந்தால் தென்னாப்பிரிக்காவை 270 ரன்களில் கூட கட்டுப்படுத்தியிருக்கலாம்.

பேட்டிங்கிலும் மோசமாக விளையாடி வெளியேறிய வீரர்கள்!

பீல்டிங்கில் தான் சொதப்பினார்கள் என்றால், பேட்டிங்கில் படு மோசமாக விளையாடி வருகின்றனர் ஆஸ்திரேலிய வீரர்கள். கடந்த போட்டியில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா, இன்னும் அதிலிருந்து வெளிவராமல் தொடர்ந்து சொதப்பியே வருகிறது.

மிட்சல் மார்ஸ், ஜோஷ் இங்க்லீஸ், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டொய்னிஸ் முதலிய நான்கு வீரர்கள் ஓரிலக்க ரன்களில் வெளியேறினர். டேவிட் வார்னர் 13 ரன்னிலும், ஸ்மித் 19 ரன்னிலும் நடையை கட்டினர். 119 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் ஆஸ்திரேலியை மோசமான தோல்வியில் இருந்து காப்பாற்ற லபுசனேவும், மிட்செல் ஸ்டார்க்கும் போராடிவருகின்றனர். அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டிவிட்டார்.

சோகமுகத்துடன் வெளியேறிய வீரர்கள்! கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்!

வார்னர், ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல் என ஸ்டார் பேட்டர்கள் கூட சோக முகத்தோடு வெளியேறியது, போட்டியை பார்க்கும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களுடைய நாடு மோசமாக செயல்படுவதை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணீர்விட்டு அழும் பதிவு ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விரைவில் ஆஸ்திரேலியா பவுன்ஸ்பேக் செய்து திரும்பி சாம்பியன் அணியாக திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.