aus w vs sl w x
கிரிக்கெட்

மகளிர் டி20 WC: தொடர்ந்து 2 போட்டியில் இலங்கை தோல்வி- 7வது கோப்பையை நோக்கி வெற்றியுடன் தொடங்கிய ஆஸி!

Rishan Vengai

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 9-வது பதிப்பானது அக்டோபர் 3 முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அக்டோபர் 3 முதல் அக்டோபர் 20 வரை நடைபெறவிருக்கும் 2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து முதலிய 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

women's t20 world cup

இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கும் பட்டியலில், குரூப் ஏ-வில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை முதலிய 5 அணிகளும், குரூப் பி-ல் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா முதலிய 5 அணிகளும் இடம்பிடித்துள்ளன.

முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி தங்களுடைய முதல் போட்டியில் இலங்கையை எதிர்த்து விளையாடியது.

அபாரமான பந்துவீச்சில் மிரட்டிய ஆஸி..

இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் தோற்ற நிலையில், வெற்றியை பெறவேண்டும் என்ற முக்கியமான போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

ஆனால் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா பவுலர்கள், முதலில் பேட்டிங் செய்த 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியை 93 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். இலங்கை அணியில் 3 வீரர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஓரிலக்க ரன்னில் வெளியேறினர். அபாரமாக பந்துவீசிய மேகன் ஷ்ட் 4 ஓவர்களில் ஒரு மெய்டன் ஓவர் உட்பட 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

94 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் பெத் மூனி 42 ரன்களுடன் அவுட்டாகாமல் நிலைத்து நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். முடிவில் 14.2 ஓவரில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

8 தொடரில் 6 கோப்பைகளை வென்றிருக்கும் ஆஸி..

இதுவரை நடந்திருக்கும் 8 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் 6 கோப்பைகளை ஆஸ்திரேலியாவும், ஒருமுறை இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் வென்றுள்ளன. இந்தியா ஒரேஒருமுறையாக 2020-ம் ஆண்டு இறுதிப்போட்டிவரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையை இழந்தது.

australia team

இங்கிலாந்து அணி - 2009

ஆஸ்திரேலியா - 2010, 2012, 2014, 2018, 2020, 2023

வெஸ்ட் இண்டீஸ் - 2016

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மற்ற அணிகளாக நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் உள்ளன.