ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டிசம்பர் 6ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி டேவிட் வார்னரின் 164 ரன்கள் மற்றும் மிட்செல் மார்ஸின் 90 ரன்கள் ஆட்டத்தின் உதவியால் 487 ரன்களை குவித்தது.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஷஃபிக் மற்றும் இமாம் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர்களால் இந்த கூட்டணியை எதுவும் செய்ய முடியாத நிலையில், கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்தை நாதன் லயன் கையில் கொடுத்தார். ஷபிக் மற்றும் இமாம் இருவரையும் 42 ரன்கள் மற்றும் 62 ரன்களில் வெளியேற்றிய லயன், ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கதவை திறந்துவிட்டார். ஷஃபிக் மற்றும் இமாம் இருவரை தவிர வேறு எந்த பாகிஸ்தான் வீரர்களும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆட்டத்தை விளையாடாததால், சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி 271 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய லயன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
216 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா அணி, கவாஜா மற்றும் மிட்செல் மார்ஸின் 90 ரன்கள் மற்றும் 63 ரன்கள் ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 450 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 89 ரன்னில் ஆல் அவுட்டானது. பாகிஸ்தானின் 8 பேட்ஸ்மேன்கள் ஓரிலக்க ரன்களில் வெளியேறினர்.
முடிவில் 360 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி. மிட்செல் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நாதன் லயன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.