pak vs aus cricinfo
கிரிக்கெட்

த்ரில் போட்டி: AUS மண்ணில் வித்தை காட்டிய PAK பவுலர்கள்.. தனியாளாக வெற்றியை தட்டிப்பறித்த கம்மின்ஸ்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கையிலிருந்த போட்டியை தனியாளாக தட்டிப்பறித்துள்ளார் ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ்.

Rishan Vengai

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.

pak vs aus

பரபரப்பாக நடைபெற்ற முதல்போட்டியில் கடைசிநேரத்தில் பாட் கம்மின்ஸின் பேட்டிங் உதவியால் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.

4 சிக்சர்களை விளாசிய நசீம் ஷா..

இன்று காலை தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு 8 பவுலர்களை கொண்டு பந்துவீசிய ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் சோதித்தார்.

மிட்செல் ஸ்டார்க்

தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்திய ஆஸ்திரேலியா பவுலர்கள், பாகிஸ்தான் அணியை சரியான நேரத்தில் இழுத்துப்பிடித்தனர். 37 ரன்னில் பாபர் அசாமை ஆடம் ஷாம்பா போல்டாக்கி வெளியேற்ற, ஒரே ஒரு ஓவரை மட்டுமே வீசிய லபுசனே ரிஸ்வான் விக்கெட்டை காலி செய்தார். அதற்குபிறகு வந்த வீரர்கள் சொதப்ப 183 ரன்னுக்கு 9 விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான்.

நசீம் ஷா

ஆனால் கடைசி நேரத்தில் வந்த நசீம் ஷா 4 சிக்சர்களை பறக்கவிட 203 ரன்கள் சேர்த்து பாகிஸ்தான் ஆல் அவுட்டானது.

தனியாளாக வெற்றியை தட்டிப்பறித்த கம்மின்ஸ்..

அதற்குபிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு பாகிஸ்தான் பவுலர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். 23 ரன்னுக்கு 2 விக்கெட்டுகள் விழ 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜோஸ் இங்கிலீஸ் இருவரும் நிலைத்து நின்று விளையாடி 44 மற்றும் 49 சேர்த்தனர்.

ஆனால் 21வது ஓவரில் லபுசனே மற்றும் மேக்ஸ்வெல் இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றிய ஹரிஸ் ராஃப் மீண்டும் பாகிஸ்தான் அணியை ஆட்டத்தில் எடுத்துவந்தார். அடுத்து களமிறங்கிய ஹார்டி மற்றும் அப்பாட் இருவரும் வெளியேற 185 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா அணி.

பாகிஸ்தான் வெற்றிபெற 2 விக்கெட்டுகள், ஆஸ்திரேலியா வெற்றிபெற 19 ரன்கள் என போட்டி மாற பாகிஸ்தானின் கைகளே ஓங்கியிருந்தது. ஆனால் கடைசிநேரத்தில் பேட்டிங் திறமையால் உயர்ந்து நின்ற பாட் கம்மின்ஸ், பாகிஸ்தான் பவுலர்கள் வியூகங்களை தகர்த்தெறிந்தார். 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் அடித்த கம்மின்ஸ், ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

கம்மின்ஸின் அசாத்தியமான ஆட்டத்தால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா அணி.