U19 WC Semi 2 X
கிரிக்கெட்

நூலிழையில் தோல்வி! கண்ணீர்விட்ட பாகிஸ்தான் வீரர்கள்! ஆஸி த்ரில் வெற்றி; ஃபைனலில் இந்தியா உடன் மோதல்!

2024 யு19 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று கண்ணீருடன் பயணத்தை முடித்துக்கொண்டது.

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவில் நடந்துவந்த 2024 யு19 உலகக்கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், அயர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 அணிகள் உலகக்கோப்பைக்காக மோதிய மோதலில், சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றன.

இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான முதல் அரையிறுதிப்போட்டி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் இறுதிவரை போராடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக சென்றது.

இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிப்போட்டியானது பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தென்னாப்பிரிக்காவின் பெனோனி, வில்லோமூர் பார்க்கில் இன்று நடைபெற்றது.

பாகிஸ்தானை 179 ரன்னில் சுருட்டிய ஆஸ்திரேலியா!

லீக் சுற்று மற்றும் சூப்பர் 6 சுற்றுகள் என அனைத்திலும் சிறப்பான பந்துவீச்சு தாக்குதல் மூலமே இவ்விரு அணிகளும் வெற்றிபெற்றிருந்த நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

Pak vs Aus

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. சஷையப் கான் நிதானமாக விளையாட, ஷன்மைல் ஹுசைன் 3 பவுண்டரிகளை விரட்டி ரன்களை எடுத்துவந்தார். 8 ஓவர்களை எதிர்கொண்டு விக்கெட் இழப்பின்றி 25 ரன்களை எடுத்திருந்த பாகிஸ்தான் அணிக்கு அதுவரை எல்லாமே சரியாக தான் சென்றிருந்தது. 9வது ஓவரை வீசவந்த டாம் ஸ்ட்ரேக்கர் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த 27 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பாகிஸ்தான் அணி.

Pak vs Aus

அத்துடன் நிறுத்தாத டாம் ஸ்ட்ரேக்கர் அடுத்துவந்த கேப்டன் சாத் பைக்கையும் வெளியேற்ற ஆட்டம் சூடுபிடித்தது. தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற 79 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான். அணி தடுமாற்றத்தில் இருந்த போது கைக்கோர்த்த அஷான் அவைஸ் மற்றும் அர்ஃபத் மினாஸ் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இரண்டு வீரர்களும் பொறுப்புடன் ஆடி அரைசதங்கள் அடித்து வெளியேற, பாகிஸ்தான் அணி டிஃபண்ட் செய்யுமளவு 179 என்ற கௌரவமான டோட்டலை எட்டியது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஆஸியை கலங்க வைத்த பாகிஸ்தான் பவுலர்கள்!

நடப்பு யு19 உலகக்கோப்பை தொடர் முழுக்க பாகிஸ்தான் அணியின் பலமாக ஸ்பின்னர், ஃபாஸ்ட் பவுலர் என இரண்டு தரப்பும் இருந்துள்ளது. அதற்கேற்றார் போல் அரையிறுதிப்போட்டியிலும் கலக்கிய பாகிஸ்தான் பவுலர்கள் ஆஸியை விட்டுப்பிடித்தனர்.

Pak vs Aus

180 ரன்கள் என்ற அழுத்தம் தரக்கூடிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி, தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. முதல் பத்து ஓவரில் ஒரு விக்கெட்டை கூட விட்டுக்கொடுக்காமல் 33 ரன்களை ஆஸ்திரேலியா எடுக்க, வெற்றி கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவுக்கு தான் என நினைக்க தோன்றியது. ஆனால் 11வது ஓவரை வீச வந்த வேகப்பந்துவீச்சாளர் அலி ராஷா, தொடக்க வீரர் ஷான் கான்ஸ்டாஸின் ஸ்டம்பை தகர்த்தெறிந்தார். தொடர்ந்து கடந்த போட்டியில் சதமடித்த கேப்டன் ஹக் வெய்ப்ஜென்னை 4 ரன்னில் வெளியேற்றிய நவீத் அகமது ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை தகர்த்தார். உடன் அழுத்தத்தில் ஹர்ஜஸ் சிங் ரன்னவுட்டாகி வெளியேற ஆட்டம் சூடுபிடித்தது.

Pak vs Aus

54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற, ஒருமுனையில் அசத்தலான பேட்டிங் ஆடிய தொடக்க வீரர் ஹார்ரி டிக்ஸான் அரைசதம் அடித்து அசத்தினார். ஒருமுனையில் டிக்ஸான் நம்பிக்கை கொடுத்தாலும் மறுமுனையில் களமிறங்கிய ரியான் ஹிக்ஸை கோல்டன் டக்கில் வெளியேற்றினார் நட்சத்திர பந்துவீச்சாளர் உபைத் ஷா. ஆட்டத்தை விட்டுக்கொடுக்காமல் போராடிய ஹார்ரியை அரஃபத் மினாஸ் போல்டாக்கி அனுப்பிவைத்தார். உடன் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரையும் அலி ராஷா அவுட்டாக்கி வெளியேற்ற ஒலிவர் பீக் மட்டும் தனியொரு ஆளாக போராடினார்.

Pak vs Aus

ஒரு கட்டத்தில் ஒலிவரா அலி ராசாவா என போட்டி மாற ஒலிவரை 49 ரன்னில் வெளியேற்றிய அலி ராஷா பாகிஸ்தானின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதிசெய்தார். 164 ரன்களுக்கு 9 இழந்து ஆஸ்திரேலியா தடுமாற, ஆஸ்திரேலியா வெற்றிக்கு 16 ரன்களும் பாகிஸ்தான் வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் என மாறியது. ஆனால் இறுதி விக்கெட்டை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்காமல் ஆட்டம் காட்டியது ஆஸ்திரேலியா.

இறுதி விக்கெட்டுடன் போராடி வென்ற ஆஸ்திரேலியா!

கடைசி 12 பந்துக்கு 6 ரன்கள் அடிக்க வேண்டும் என போட்டி மாற, ஆஸ்திரேலியாவின் மெக்மில்லன் மற்றும் விட்லெர் இருவரும் நம்பிக்கையை விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை போராடினர். இறுதி 6 பந்துகளுக்கு 3 ரன்கள் என மாற ஆட்டம் அந்த பக்கமா இந்த பக்கமா என ஊசல் ஆடியது. இறுதிஓவரின் முதல் பந்தில் எட்ஜாகி கீப்பருக்கு பின்னால் சென்ற பந்து பவுண்டரிக்கு செல்ல 1 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது ஆஸ்திரேலியா அணி.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது.