ஸ்மித் - மார்ஷ் pt web
கிரிக்கெட்

அதிகபட்ச சேஸ்.. அட்டகாச ஆட்டம்.. மிரட்டிய ஆஸ்திரேலியா; வங்கதேச பந்துவீச்சை சிதைத்த மார்ஷ்

Angeshwar G

உலகக்கோப்பைத் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதியான நிலையில் இன்று வங்கதேச அணியுடன் நடந்த 43-ஆவது லீக் போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு பலப்பரீட்சையாகவே அமைந்திருக்கும்.

புனேவில் உள்ள Maharashtra Cricket Association மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 306 ரன்களை குவித்தது. அந்த அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்த வண்ணம் இருந்தனர். அதிகபட்சமாக தௌஹித் ஹ்ரிடா 74 ரன்களை எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி விக்கெட்களை வீழ்த்தியது என்பதை விட வங்கதேச பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வங்கதேச அணியின் கேப்டன் ஷாண்டோ 45 ரன்களிலும், மஹ்மதுல்லா 32 ரன்களிலும் ரன் அவுட்களில் வெளியேறினர். இதைத் தாண்டி ஆஸ்திரேலியா தரப்பில் ஸாம்பா 2 விக்கெட்களையும் அபாட் 2 விக்கெட்களையும் ஸ்டோய்னிஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த உலகக்கோப்பையில் வங்கதேச அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் மிக மோசமாகவே இருந்துள்ளது. 9 இன்னிங்ஸ் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மொத்தமாகவே 268 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர்.

இன்று நடந்த போட்டியில் வங்கதேச அணி, இன்னிங்ஸின் முதல் பத்து ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்களை குவித்திருந்தது. ஆனால் அடுத்த 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. 10 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தது ஆஸ்திரேலியா.

மூன்றாவது 10 ஓவர்களில் ஷாண்டோ, ரன் அவுட் ஆகி இருந்தாலும் வங்கதேசம் 10 ஓவர்களில் 66 ரன்களை எடுத்திருந்தது. நான்காவது 10 ஓவர்களில் 59 ரன்களை எடுத்திருந்தாலும் மஹ்மதுல்லா ரன் அவுட் மூலம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஐந்தாவது 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியே பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. 67 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தாலும் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தது ஆஸ்திரேலியா.

307 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ட்ராவிஸ் ஹெட் 10 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தாலும் டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் ஜோடி ஆஸ்திரேலிய அணியை மீட்டது. வங்கதேச அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார் மார்ஷ். வார்னர் 53 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும் அடுத்து வந்த ஸ்மித், மார்ஷ்க்கு துணையாக ஆஸ்திரேலியாவை தாங்கினார்.

ஆஸ்திரேலிய அணி 44.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 307 ரன்களை எட்டிப்பிடித்து வெற்றிபெற்றது. மிட்செல் மார்ஷ் அதிரடியாக சதமடித்து 177 ரன்களைக் குவித்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த ஸ்மித் 63 ரன்களை எடுத்திருந்தார். உலகக்கோப்பை போட்டிகளில் அதிகமுறை 50 ரன்களை எடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சமன் செய்துள்ளனர். மூவரும் இதுவரை 11 முறை 50+ ரன்களை உலகக்கோப்பை போட்டிகளில் குவித்துள்ளனர்

ஆஸ்திரேலிய அணி முதல் 10 ஓவர்களில் 58 ரன்களை எடுத்து ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. அடுத்த 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 67 ரன்களை எடுத்திருந்தது. மூன்றாவது 10 ஓவர்களில் அந்த அணி விக்கெட்டை இழந்திருந்தாலும் 54 ரன்களை எடுத்திருந்தது. நான்காவது 10 ஓவர்களில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி 85 ரன்களை குவித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தது.

307 ரன்கள் இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி வெற்றிகரமாக சேஸ் செய்ததன் மூலம் நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் அதிகபட்ச சேஸாக இது அமைந்தது. நடப்பாண்டு நடந்த உலகக்கோப்பைகளில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக 292 ரன்களை எட்டிப்பிடித்ததே அந்த அணியின் அதிகபட்ச சாதனையாக இருந்தது.

வங்கதேச அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 132 பந்துகளில் 177 ரன்களை குவித்தார். 134.09 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய அவர் 9 சிக்ஸர்கள் 17 பவுண்டரிகளை விளாசியுள்ளார். பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்திய வங்கதேச அணியை பந்துவீச்சின்போது சிதைத்துவிட்டார் மிட்செல் மார்ஷ்