அஸ்வின் web
கிரிக்கெட்

“பாகிஸ்தான் அணியில் கேப்டன்சிக்காக மியூசிக்கல் சேர் போட்டி நடந்துவருகிறது..”- ரவிச்சந்திரன் அஸ்வின்

பாகிஸ்தான் அணியின் மோசமான நிலை குறித்து பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், திறமையான வீரர்கள் இருந்தும் கேப்டன்சிக்காக மியூசிக்கல் சேர் விளையாடிவருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நிலையை எடுத்துரைத்தார்.

Rishan Vengai

ஒரு காலத்தில் உலக கிரிக்கெட் வீரர்களையே ஆட்டம் காண வைத்த தலைசிறந்த வீரர்களை கொண்ட போற்றத்தக்க கிரிக்கெட் நாடாக பாகிஸ்தான் அணி வலம்வந்தது. 1992 உலகக்கோப்பையை தொடரிலிந்து வெளியேறும் நிலையிலிருந்து வந்து பாகிஸ்தான் அணி வென்றது என்பதெல்லாம் காலத்தாலும் அழிக்க முடியாத வரலாற்று சம்பவம். அப்படி ஒரு கிரிக்கெட் பாரம்பரியத்தை கொண்டிருந்த பாகிஸ்தான் அணி, தற்போது வீரர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் படுகுழிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வருகிறது.

babar azam

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறியது, அப்போது கேப்டனாக இருந்த பாபர் அசாம் சகவீரர்களுடன் கோபமாக பேசியதாகவும், அதனால் வீரர்கள் சொல்லாமல் கொள்ளாமல் இந்தியாவை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் கசிந்தன.

Babar Azam

அதற்குபிறகு கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டு, புதிய கேப்டன்களாக டெஸ்ட் அணிக்கு ஷாத் ஷகீலும், டி20 அணிக்கு ஷாஹீன் அப்ரிடியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் தொடர் தோல்வி காரணமாக மீண்டும் ஷாஹீன் அப்ரிடியிடமிருந்த கேப்டன்சி பொறுப்பு பாபர் அசாமிடம் வந்தது.

ஆனால் பாபர் அசாம் தலைமையில் 2024 டி20 உலகக்கோப்பைக்கு சென்ற பாகிஸ்தான் அணி, இந்தியாவுடன் வெற்றிபெற வேண்டிய இடத்திலிருந்து தோற்றது மட்டுமில்லாமல், அமெரிக்காவுக்கு எதிராக வரலாற்று தோல்வியையும் சந்தித்து தோல்வி முகத்துடன் நாடுதிரும்பியது.

pak vs ban

இந்நிலையில் சமீபத்தில் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை தோற்ற பாகிஸ்தான் அணி, கடந்த 3 ஆண்டுகளாக சொந்த மண்ணில் கூட வெற்றிபெற முடியாமல் தடுமாறிவருகிறது.

மியூசிக்கல் சேர் போட்டி நடந்துவருகிறது..

பாகிஸ்தான் அணியின் மோசமான நிலைமையை கண்டு வருந்துவதாக தெரிவித்திருக்கும் இந்திய கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், அவ்வணியில் வீரர்களிடையே மியூசிக்கல் சேர் போட்டி நடந்துவருவதாக தெரிவித்தார்.

யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய நிலை மற்றும் அவர்கள் கடந்து வந்துள்ள கடினமான கட்டம் என்னைக் கொஞ்சம் வருத்தப்படுத்துகிறது. ஒரு கிரிக்கெட் வீரராக நான் பார்க்கும் போது பாகிஸ்தான் ஒரு பெருமைக்குரிய கிரிக்கெட் தேசமாக இருந்தது. ஏனென்றால் பல தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளனர்.

ஆனால் தற்போது வீரர்களிடையே ஒற்றுமையில்லை, ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல நினைக்கிறார்கள். சரியாக சொல்லப்போனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மியூசிக்கல் சேர் போட்டி நடந்துவருகிறது. இன்னும் இசை ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது, அந்த ஒரு நாற்காலியை பிடிக்க வீரர்களிடையே போட்டி இருந்துவருகிறது. அவர்களிடம் திறமைக்கு ஒரு குறையும் இல்லை. ஆனால் அணியை பெரிதாக நினைக்காமல், தன்னுடைய நலனை மட்டுமே நினைத்து செயல்பட்டுக்கொண்டிருப்பது போல் தெரிகிறது.

அதன்காரணமாகவே அந்த அணி மோசமாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் 2023 உலகக் கோப்பையில் தோற்றனர், பின்னர் பாபர் அசாம் கேப்டன்சியில் இருந்து ராஜினாமா செய்தார். ஷாஹீன் அஃப்ரிடி புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார், ஆனால் மீண்டும் ஷாஹீன் அப்ரிடி கீழ் இறக்கப்பட்டு பாபர் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார், இப்போது நிலைமையைப் பாருங்கள்... அவர்கள் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. கடைசியாக சொந்த மண்ணில் அவர்கள் ஒரு போட்டியில் வென்று 1000 நாட்கள் இருக்கும் என நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார்.