பாபர் - குலாம் - அஸ்வின் PT
கிரிக்கெட்

பாபர் அசாமுக்கு மாற்று இவரா? ஊடக விமர்சனங்களை கடந்து சதமடித்த PAK வீரர்.. பாராட்டி பதிவிட்ட அஸ்வின்!

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களை அடித்தபோதும் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஒரு அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் அடித்து தோற்பது வரலாற்றில் முதல் முறையாக பதிவுசெய்யப்பட்டது.

ரூட் - ப்ரூக்

வங்கதேசத்துக்கு எதிராக மிகமோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராகவும் மோசமான உலக சாதனை படைத்த நிலையில், அணிமீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அணியிலிருந்து நீக்கப்பட்ட பாபர் அசாம்..

பாபர் அசாம் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார், கடைசியாக விளையாடிய 18 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்காத நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

babar azam

மோசமான பர்ஃபார்மன்ஸ் காரணத்தால், “பாபர் அசாம், நசீம் ஷா, ஷாகின் அப்ரிடி மற்றும் விக்கெட் கீப்பர் சர்ஃபராஸ்” முதலிய ஸ்டார் வீரர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர்.

அவர்களுக்கு மாற்று வீரர்களாக அறிமுக வீரர்களான ஹசீபுல்லா, மெஹ்ரான் மும்தாஜ், கம்ரான் குலாம் மூன்று பேருடன், வேகப்பந்து வீச்சாளர் முகமது அலி மற்றும் ஆஃப் ஸ்பின்னர் சஜித் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

பாபர் அசாமுக்கு மாற்றாக வந்து சதமடித்த வீரர்..

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாபர் அசாமுக்கு பதிலாக விளையாடிய கம்ரான் குலாம், அணி 19/2 என்ற மோசமான நிலையில் இருந்தபோது கம்பேக் கொடுத்து அணியை முதல்நாள் முடிவில் 259 ரன்கள் சேர்க்க உதவினார்.

11 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசி 118 ரன்களை குவித்த குலாம் அறிமுக போட்டியில் இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக சதமடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.

கம்ரான் குலாம்

அதுவரை எல்லோரும் எதற்காக பாபர் அசாமை டிராப் செய்தீர்கள், அவர் இல்லையென்றால் யார் வந்து அடிப்பார்கள் என்ற விமர்சனங்களை முன்னிறுத்தினர். ஆனால் ஒரு பெரிய சர்ச்சை விசயங்களுக்கு இடையில்வந்து சதமடித்த கம்ரான் குலாம் அனைவரையும் வாயடைக்க வைத்தார்.

இந்நிலையில் இந்தியாவின் ஸ்டார் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கம்ரான் குலாமை புகழ்ந்து பதிவிட்டார். எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்ட பதிவில், “பாபர் அசாமின் நீக்கத்தை பேசும் இடத்தில் கம்ரான் குலாமின் அசாத்தியமான பேட்டிங் குறித்தும் பேசுங்கள், அவர் புயலின் போது உள்ளேவந்து சதமடித்து அசத்தியுள்ளார்” என்று மிகப்பெரிய பாராட்டை வைத்துள்ளார்.