nathan lyon - ashwin web
கிரிக்கெட்

531 டெஸ்ட் விக்கெட்டுகள்.. 2 சாதனை பட்டியல்களில் நாதன் லயனை பின்னுக்கு தள்ளிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கு போட்டியாக இருக்கும் சமகால கிரிக்கெட்டர் நாதன் லயனை பின்னுக்கு தள்ளி அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக மாறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புனேவில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்துவரும் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களுடன் விளையாடிவருகிறது.

ashwin

டாம் லாதம் (15 ரன்கள்), டெவான் கான்வே (76 ரன்கள்) மற்றும் வில் யங் (18 ரன்கள்) என 3 பேரின் விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்திய நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 531-ஆக மாறியுள்ளது.

நாதன் லயனை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்..

சமகாலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு ஸ்பின்னர்களாக ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் சிறந்து விளங்குகின்றனர். வேகப்பந்துவீச்சுக்கு பெயர் போன ஆஸ்திரேலியாவில் இருந்து நாதன் லயன் சிறந்த பந்துவீச்சாளராக ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அஸ்வினுக்கு முன்னதாக 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல் சாதனையை நாதன் லயன் எட்டியிருந்தார்.

nathan lyon

அவரை பின்தொடர்ந்து வந்த அஸ்வின் தற்போது அவரை பின்னுக்கு தள்ளி, அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய சமகால பவுலராக மாறியுள்ளார். சமகால கிரிக்கெட்டில் டெஸ்ட்டில் போட்டிபோடும் இரண்டு பவுலராக நாதன் லயன் மற்றும் அஸ்வின் இருவர் மட்டுமே தற்போது நீடிக்கின்றனர். ஜாம்ஸ் ஆண்டர்சன் ஒருவர் இருந்த நிலையில் தற்போது அவரும் ஓய்வுபெற்றுவிட்டார்.

அஸ்வின்

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டெவான் கான்வேவை வெளியேற்றிய அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 531வது விக்கெட்டை கைப்பற்றி, அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் நாதன் லயனை (530) பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இவர்களை கடந்து 10 இடங்களுக்கு பின் தங்கிய நிலையில் டிம் சவுத்தீ (384 விக்கெட்டுகள்), 20 இடங்களுக்கு பின் தங்கிய நிலையில் மிட்செல் ஸ்டார்க் (358), ரபடா (308) மற்றும் ரவீந்திர ஜடேஜா (306) 3 பேரும் நீடிக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்டுகள் (189) வீழ்த்திய பவுலராக மாறியிருக்கும் அஸ்வின், நாதன் லயனை (187) பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்:

* முரளிதரன் - 800 விக்கெட்டுகள்

* ஷேன் வார்னே - 708 விக்கெட்டுகள்

* ஜேம்ஸ் ஆண்டர்சன் - 704 விக்கெட்டுகள்

* அனில் கும்ப்ளே - 619 விக்கெட்டுகள்

* ஸ்டூவர்ட் பிராட் - 604 விக்கெட்டுகள்

* க்ளென் மெக்ராத் - 563 விக்கெட்டுகள்

* ரவிச்சந்திரன் அஸ்வின் - 531 விக்கெட்டுகள்*

* நாதன் லயன் - 530 விக்கெட்டுகள்*