jadeja - ashwin X
கிரிக்கெட்

”நான் பேசின தமிழ் உங்களுக்கு பிடிச்சதா அஸ் அண்ணா”! ஜடேஜா சர்ப்ரைஸுக்கு ஜாலியா பதில் சொன்ன அஸ்வின்!

100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் அஸ்வினுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

Rishan Vengai

இந்தியாவின் சுழல் மன்னனான தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 100வது டெஸ்ட் போட்டி மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற இரண்டு மிகப்பெரிய மைல்கல் சாதனைகளை எட்டினார். அவரின் இந்த இமாலய சாதனைகளை போற்றும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 500 தங்க நாணயங்கள் பதித்த சிறப்பு நினைவு பரிசும், செங்கோலும், ஒரு கோடி ரூபாய் காசோலையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, முன்னாள் பிசிசிஐ தலைவர் என் சீனிவாசன், முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முதலிய ஜாம்பவான்கள் கலந்துகொண்டு அஸ்வினை பாராட்டி பேசினர்.

இதற்கிடையில் வீடியோ மூலம் அஸ்வினுக்கு சர்ப்ரைஸான பாராட்டை தெரிவித்த ரவிந்திர ஜடேஜா, “உங்கள் ஜீனியஸ் மூளையை என்னுடன் பகிர்ந்து கொண்டு, இன்னும் பல விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். உங்களை பின் தொடர்ந்து நானும் சாம்பியனாக விரும்புகிறேன். மீசை வச்சவன் ரவி இந்திரன், மீசை வைக்காதவன் ரவிச்சந்திரன்” என்று கலகலப்பாக பேசி ரஜினியின் தில்லுமுல்லு ஸ்டைலில் பாராட்டி பேசினார்.

Ashwin - Jadeja

இந்நிலையில், தன்னுடைய பவுலிங் பார்ட்னரான ஜடேஜாவின் சர்ப்ரைஸ் எப்படி இருந்தது என்று அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.

நான் பேசுன தமிழ் உங்களுக்கு பிடிச்சதா?

பிசிசிஐ கவுரவிப்பதை விட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் என்னை கௌரவித்தது எனக்கு உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது என்று கூறிய அஸ்வின், தன்னுடைய எக்ஸ் தளத்தில் பாராட்டு விழா புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அந்தப்பதிவில் கமெண்ட் செய்த ஜடேஜா, “என் தமிழ் உங்களுக்கு பிடிச்சிருந்ததா?” என்று சர்ப்ரைஸ் குறித்து கேட்டார்.

ஜடேஜாவின் கமெண்டிற்கு பதிலளித்துள்ள அஸ்வின், “ஜட்டு உன்னுடைய வாழ்த்து செய்தியை பார்த்து, என்னுடைய சர்ப்ரைஸையும், சிரிப்பையும் என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை” என்று லவ் எமோஜியோடு பதிலளித்துள்ளார்.

இந்திய அணிக்காக 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின், அதிகமுறை 5 விக்கெட்டுகள் மற்றும் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து முதல் இந்திய வீரராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.