வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியானது டொமினிகாவில் நடைபெற்றது.
இந்த முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் அற்புதமான பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி. பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார் ஜெய்ஸ்வால்.
இந்த சாதனையை எட்டிய 17வது இந்திய டெஸ்ட் அறிமுக வீரர் என்ற பெருமை பெற்ற அவர், 215 பந்துகளில் 11 பவுண்டரிகள் அடித்து சதத்தை பதிவு செய்தார். அவருடன் சேர்ந்து அற்புதமான பார்ட்னர்ஷிப் போட்ட இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இவர்களது அபாரமான ஆட்டத்தால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில், அதிகபட்ச முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பை இந்திய அணி பதிவு செய்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 229 ரன்களை ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் இணை சேர்த்தது.
பின் வந்த விராட் கோலியும் தனது பங்கிற்கு 76 ரன்களை சேர்க்க இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. பின் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில், ரவிச்சந்திர அஸ்வின் 7 விக்கெட்களையும் ஜடேஜா 2 விக்கெட்களையும் சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். ஆட்ட நாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணியின் வெற்றியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பங்கு மிக முக்கியமானது. ஏனெனில் இவர் இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிகமுறை (8 முறை) 10 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். முதலிடத்தில் அஸ்வின் மற்றும் அனில் கும்ப்ளே இருக்க 5 முறை 10 விக்கெட்களை வீழ்த்தி அடுத்த இடத்தில் ஹர்பஜன் சிங் உள்ளார்.
நேற்றைய போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் ஆசிய கண்டத்திற்கு வெளியே நடந்த போட்டிகளில் இந்திய அணி 5 ஆவது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 1978 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும், 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராகவும், 2005 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராகவும், 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும் இந்திய அணி தனது இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியாவிற்கு இடையே நடந்த போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் மூன்றாது இடத்தை பெற்றார்.
* முதலிடத்தில் 1988 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நரேந்திர ஹிர்வானி, 136 ரன்களை விட்டுக் கொடுத்து 16 விக்கெட்களை வீழ்த்தியது சாதனையாக உள்ளது.
* இரண்டாவது இடத்தில் 1975 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆன்டி ராபர்ட்ஸ், 121 ரன்களை விட்டுக்கொடுத்து 12 விக்கெட்களை வீழ்த்தியதி உள்ளது.
* அஸ்வின் மூன்றாவது இடத்தில் உள்ளார்
* நான்காவது இடத்தில் 1989 ஆம் ஆண்டு நடந்த இந்தியாவுடனான போட்டியில் மால்கம் மார்ஷல், 89 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 11 விக்கெட்களை வீழ்த்தியது உள்ளது.
* ஐந்தாவது இடத்தில் 1958 ஆம் ஆண்டு கான்பூரில் இந்தியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெஸ் ஹால் 126 ரன்களை விட்டுக்கொடுத்து 11 விக்கெட்களை வீழ்த்தியது உள்ளது.
வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்த இந்தியர்களின் பட்டியலிலும் அஸ்வின் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் பகவத் சந்திரசேகரும் இரண்டாவது இடத்தில் இர்ஃபான் பதானும் உள்ளனர்.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 72 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் 4 இடத்தை பிடித்துள்ளார். 89 விக்கெட்களுடன் கபில்தேவ் முதலிடத்திலும், 76 விக்கெட்களுடன் மால்கம் மார்ஷல் இரண்டாவது இடத்திலும் 74 விக்கெட்களுடன் அனில் கும்ப்ளே மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.