Tagenarine Chanderpaul Twitter
கிரிக்கெட்

IND vs WI : தந்தை-மகன் என இரண்டு தலைமுறை வீரர்களை வெளியேற்றிய முதல் இந்திய பவுலரானார் அஸ்வின்!

இந்தியா மற்றும் வெஸ்ட் அணிகள் மோதிவரும் முதல் டெஸ்ட் போட்டியில் புதிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார், சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Rishan Vengai

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று டொமினிகாவில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Ind vs Wi

டாஸ் வென்ற விண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். சொந்த மண்ணில் டாஸ்ஸை வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில், இந்திய அணி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பிராத்வெயிட் மற்றும் டேகனரின் சந்தர்பால் நல்ல தொடக்கத்தை அமைத்தனர். இரண்டு தொடக்க வீரர்களும் 80 பந்துகளை சந்தித்து நிதானமாக விளையாடிய நிலையில், விக்கெட்டை வீழ்த்த களத்தில் இறக்கப்பட்டார் இந்தியாவின் ப்ரைம் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின்.

நிதானமாக விளையாடிய சந்தர்பாலை சுழலில் சிக்க வைத்த அஸ்வின்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின் டிராப் செய்யப்பட்ட நிலையில், இந்த போட்டியில் என்ன செய்யப்போகிறார் என்ற எண்ணம் இந்திய ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் விக்கெட்டை வீட்டுக்கொடுக்காமல் இளம் வீரரான சந்தர்பால் கடினமாகவே இருந்தார். இடது கை வீரரான டேகனரின் சந்தர்பாலுக்கு எதிராக இரண்டு ஓவர்களில் எவ்வளவோ மெனக்கிட்டும் அஸ்வினால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

தன்னுடைய தந்தை ஷிவ்நரைன் சந்தர்பால் போலவே சிறப்பான பேட்டிங் டெக்னிக்கை வைத்திருக்கும் டேகனரின் சந்தர்பாலை வீழ்த்த அஸ்வினுக்கு ஒரு சிறப்பான பந்து தேவைப்பட்டது. சந்தர்பாலுக்கு எதிராக அஸ்வின் தன்னுடைய 3வது ஓவரின் 5-வது பந்தில் சர்ப்ரைஸ் கொடுத்தார். பிளைட் செய்து காற்றில் தூக்கிப்போட்ட அஸ்வின், சந்தர்பாலை குழப்பத்தில் தள்ளினார். முன்னால் சென்று ஆடுவதா, பேக்புட்டில் ஆடுவதா என்ற குழப்பத்திற்கு சென்ற சந்தர்பால், முடிவில் பந்தை டிபண்ட் செய்வதற்குள் பந்து ஸ்டம்பை தகர்த்தது. ஒரு அற்புதமான பந்தை வீசி இளம் சந்தர்பாலை வெளியேற்றி அசத்தினார் அஸ்வின்.

தந்தை-மகன் இருவரையும் வெளியேற்றிய முதல் இந்திய பவுலர்!

12 வருடங்கள் பின்னோக்கி சென்றால், அஸ்வின் டெல்லியில் நடந்த தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர பேட்டரான ஷிவ்நரைன் சந்தர்பாலின் விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். தற்போது அவருடைய மகனான டேகனரின் சந்தர்பாலையும் வெளியேற்றி அசத்தியுள்ளார் அஸ்வின்.

Shivnarine Chanderpaul

இந்நிலையில் உலக கிரிக்கெட் வரலாற்றில் தந்தை மற்றும் மகன் என இரண்டு தலைமுறை வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றிய முதல் இந்திய பவுலர் மற்றும், 5வது உலக பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் அஸ்வின்.

அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்து முதல் இந்திய பவுலரான அஸ்வின்!

டேகனரின் சந்தர்பாலின் ஸ்டம்பை தகர்த்து விக்கெட்டை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின், விக்கெட்டுகளை போல்ட் மூலம் அதிக முறை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் 94 முறை போல்ட் மூலம் விக்கெட்டை பெற்றிருந்த அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து, 95வது முறையாக போல்ட் மூலம் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.

அந்த வரிசையில் அஸ்வின் 95 முறை, அனில் கும்ப்ளே 94 முறை, கபில் தேவ் 88 முறை, முகமது ஷமி 66 முறை என அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 76 ரன்னிற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அஸ்வின், ஜடேஜா தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.