ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான முகமது ஷாஜாத் தோனியின் மிகப்பெரிய ரசிகராவார். தோனியை போலவே விளையாட நினைக்கும் அவர், கேப்டன் கூலைப்போலவே அதிரடிக்கு பெயர் போனவர். 2018ஆம் ஆண்டு ஆசியக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களை விளாசிய அவர், 124 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு எதிரான போட்டியை சமனுக்கு அழைத்துச்சென்றார்.
இந்நிலையில், அன்றைய போட்டிக்கு பிறகு தோனியிடம் ஷாஜாத் குறித்து பேசியதாக தெரிவித்திருக்கும் அப்போதைய ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர், ஒரு நகைச்சுவையான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
2018ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டை மேட்ச்சுக்கு பிறகு தோனியிடம் பேசியதாக கூறியிருக்கும் அஸ்கர், “அப்போது தோனியுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தோனி ஒரு சிறந்த கேப்டன், இந்திய கிரிக்கெட்டுக்கு கடவுள் கொடுத்த வரம். அதுமட்டுமல்லாமல் ஒரு நல்ல மனிதரும் கூட, அவரிடம் முகமது ஷாஜாத் பற்றி நிறைய பேசினேன்.
தோனியிடம் ஷாஜாத் உங்கள் பெரிய ரசிகன் என்று கூறினேன். அப்போது அவர், “ஷாஜாத் பெரிய வயிறுடன் இருக்கிறார், ஒருவேளை அவர் 20 கிலோவை குறைத்தால், நான் அவரை ஐபிஎல்லில் சிஎஸ்கேவில் தேர்வு செய்வேன்” என்று கூறினார். ஆனால் வேடிக்கையாக ஆசிய கோப்பை தொடருக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பிய ஷாஜாத், மேலும் 5 கிலோ அதிகரித்துவிட்டார்” என்று சிரித்தபடியே டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் அஸ்கர் ஆப்கன் கூறியுள்ளார்.