அர்ஜுன் டெண்டுல்கர் web
கிரிக்கெட்

'அதே ரத்தம்.. அப்படி தான் இருக்கும்!' - 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அர்ஜுன் டெண்டுல்கர் அபாரம்!

Rishan Vengai

பொதுவாக ஒரு பெரிய ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களின் வாரிசுகள், அவர்களின் தந்தையின் கால் தடத்தை பின்பற்றும்போது மிகப்பெரிய சவால்களையும், அழுத்தங்களையும் எதிர்கொள்வார்கள். அதுவும் தந்தையும், மகனும் ஒரே தொழில்முறையில் இருந்தால், தந்தையிடம் இருந்த அதே திறமையை மகனிடமும் எதிர்ப்பார்க்கும் சூழல் அதிகரித்து, அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும்.

இதனாலேயே கிரிக்கெட்டின் கடவுள் என புகழப்படும் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய மகன்மீது தன்னைப்போன்ற எதிர்ப்பார்ப்பு பொதுவெளியில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், தன்னுடைய ஆதரவு இருந்துவிட கூடாது என்பதற்காகவும், மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் மூக்கை நுழைக்காமல் முடிந்தவரை தவிர்த்துவருகிறார்.

arjun tendulkar

சச்சின் வாரிசு என்ற பெரிய பின்புலம் இருந்தாலும் மும்பை அணியில் விளையாடாமல், தன்னுடைய திறமையால் மட்டுமே வரவேண்டும் என்பதற்காக அர்ஜுன் டெண்டுல்கர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கோவா அணிக்காக விளையாடிவருகிறார்.

இந்நிலையில் தற்போது கோவா அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்கும் சச்சின் டெண்டுல்கர், ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

9 விக்கெட்டுகளை அள்ளிய அர்ஜுன் டெண்டுல்கர்..

முதல் தர கிரிக்கெட் சீசனுக்கு முன்னதாக டாக்டர் கே திம்மப்பையா நினைவு போட்டியில் கர்நாடகா மற்றும் கோவா அணிகள் பங்குபெற்று விளையாடின. இதில் கோவா அணிக்காக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியை இன்னிங்ஸ் வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

முதலில் விளையாடிய KSCA XI அணி முதல் இன்னிங்ஸில் 13 ஓவர்களில் 5/41 என்ற அர்ஜுன் டெண்டுல்கரின் அபாரமான பந்துவீச்சால் 103 ரன்களுக்கு சுருண்டது. அதற்குபிறகு ஆடிய கோவா அணி 413 ரன்கள் குவித்தது. அவர்களை தொடர்ந்து ஆடிய KSCA XI அணி 30.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இரண்டாவது இன்னிங்ஸில் அர்ஜுன் 13.3 ஓவர்களில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங்கிடம் தான் அர்ஜுன் டெண்டுல்கர் பயிற்சி பெற்றார். ஒருமுறை அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து “அர்ஜுன் டெண்டுல்கர் உங்களிடம் பயிற்சிக்காக வந்தார். அவருடைய எதிர்காலத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நீங்கள் நிலக்கரி சுரங்கத்தில் வைரத்தை பார்த்திருக்கிறீர்களா? அவரும் ஒரு சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கரி போன்று தான், சரியான கைகளில் கொடுக்கப்பட்டால் அது விலைமதிப்பற்றதாக மாறும்” என்று கூறியிருந்தார்.

ஒருமுறை மகன் குறித்து பேசியிருந்த சச்சின், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விளையாடுவதை பார்க்கும்போது அவர்கள் தேவையில்லாத மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனை தவிர்க்கவே, நான் அர்ஜுன் விளையாடுவதை பார்ப்பதில்லை. ஏனெனில் எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் அர்ஜுன் விளையாட்டைக் காதலிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதையும் மீறி நான் போய் அர்ஜுனின் ஆட்டத்தைப் பார்க்க விரும்பினால், அர்ஜுனுக்கோ அல்லது அவனின் பயிற்சியாளருக்கு கூட தெரியப்படுத்தாமல் எங்கோ ஓரிடத்தில் ஒளிந்துகொண்டு தான் பார்ப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.