இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர். தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார்.
இவர், ஏற்கெனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த ஆயிஷா முகர்ஜி என்பவரை, கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, ஜோராவர் என்ற குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ஷிகர் தவான் விவாகரத்து கோரி டெல்லி குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார். அதன் விசாரணையில் கடந்த அக்டோபர் மாதம் அவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. எனினும், இவருடைய மகன் ஜோராவர் மற்றும் ஆயிஷா முகர்ஜி ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஒடிசா: கிரிக்கெட் விளையாடிய எம்.எல்.ஏ... பந்து தாக்கியதில் நேர்ந்த சோகம்!
இந்த நிலையில், தன்னுடைய மகனைக் காணாமல் தவிப்பதாக ஓர் உருக்கமான பதிவை, தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்தும் கூறியுள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் தன்னுடைய இன்ஸ்டாவில்,
”உன்னை நேரில் பார்த்து ஒரு வருடமாகப் போகிறது. உன்னை எங்குமே தொடர்புகொள்ள முடியாமல் கடந்த மூன்று மாதங்களாக (பிளாக்) முடக்கப்பட்டுள்ளேன். அதனால் இந்த ஒரே புகைப்படத்தினைப் பதிவிட்டு உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறுகிறேன். உன்னை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும், டெலிபதியில் சந்திக்கிறேன். உன்னை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. சிறப்பாக வளர்கிறாய் என நம்புகிறேன்.
உனது அப்பா, எப்போதும் உன்னை மிஸ் செய்கிறேன். உன்னை மிகவும் நேசிக்கிறேன். உனது அப்பா எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் முகத்தில் புன்னகையுடன் காத்திருக்கிறார். கடவுளின் அருளால் நாம் மீண்டும் சந்திப்போம் என நம்புகிறேன். குறும்புத்தனங்களுடன் இரு; ஆனால் மோசமாக இருக்காதே. பிறருக்கு உதவுபவராக, பொறுமையாக, பணிவுடன், இரக்ககுணம் உள்ளவனாக இரு. உன்னைப் பார்க்காவிட்டாலும் உனக்காகத் தினமும் எழுதுகிறேன். உன்னைப் பற்றியும் உனது தினசரி வாழ்க்கை பற்றியும் தினமும் விசாரிக்கிறேன். என்னுடைய வாழ்வில் நான் என்னவெல்லாம் செய்கிறேன் என அனைத்தையும் பகிர்ந்து வருகிறேன். லவ் யூ ஜோரா. மிக்க நேசத்துடன் அப்பா’ என அதில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: டெல்லி: கடன் பாக்கி ரூ.1500-ஐ திருப்பிக்கேட்ட இளைஞருக்கு கத்திக்குத்து
முன்னதாக, இவர்களின் விவாகரத்து வழக்கின்போது, மகனை அடிக்கடி இந்தியா வந்து ஷிகர் தவானுக்கு காட்ட வேண்டும் என்று ஆயிஷா முகர்ஜிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
மேலும், ஷிகர் தவான் விரும்பினால் ஆஸ்திரேலியாவுக்கு சென்று மகனை பார்க்கலாம் என்றும் இருவரும் வீடியோ காலில் சந்தித்து உரையாட தாய் ஆயிஷா முகர்ஜி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.