MSD - Rohit Sharma IPL
கிரிக்கெட்

”CSK அணியை ரோகித் சர்மா வழிநடத்த வேண்டும்” Dhoni-யின் புதிய ரோலை தொடர்ந்து முன்.CSK வீரர் விருப்பம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய ரோலில் செயல்படப்போவதாக தெரிவித்திருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா செயல்படவேண்டும் என்று முன்னாள் CSK வீரர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

இந்திய கேப்டனாக ரோகித் சர்மா தன்னுடைய நாட்டிற்கும் இந்திய அணிக்கும் ஒரு உலகக்கோப்பையாவது வென்று கொடுக்கவேண்டும் என்ற கனவோடு பயணித்துவருகிறார். 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் கோப்பையின் மீது பாதி கைகளை வைத்த ரோகித் தலைமையிலான இந்திய அணி, இறுதிப்போட்டியில் துரதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பை வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது.

2023 ஒருநாள் உலகக்கோப்பை முழுவதும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தாலும், தொடர் முழுவதும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தாலும், கோப்பை வெல்லாத ஒரே காரணத்திற்காக ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார். புதிய கேப்டனாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.

கடந்த 2 வருடங்களாக நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறேன்! - ரோகித் சர்மா

ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய மும்பை நிர்வாகம், அவர் கேப்டன் பொறுப்பால் பேட்டிங்கில் கோட்டைவிடுகிறார். இனி ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பான ஆட்டத்தை ரோகித்தால் வெளிப்படுத்த முடியும் என்று கூறியது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் 2023 ஒருநாள் உலக்கோப்பையில் விராட் கோலிக்கு பிறகு அதிக ரன்களை குவித்த ஒரேவீரர் ரோகித் சர்மா மட்டும்தான். தொடர் முழுவதும் அதிரடியில் மிரட்டிய அவர், 54 சராசரியில் 597 ரன்களை குவித்திருந்தார்.

rohit sharma

இந்நிலையில்தான் மும்பை பயிற்சியாளர் மார்க் பவுச்சரின் கருத்துக்கு, வீடியோ பதிவிலேயே எதிர்ப்பை தெரிவித்திருந்தார் ரோகித் சர்மா மனைவி ரிதிகா. மனைவியின் கருத்திற்கு பிறகு “என் பக்கம் எப்போதும் இருப்பவர்” என்ற பதிவை மனைவிக்காக பதிவிட்ட ரோகித் சர்மா, ஓய்வு பெறுவது பற்றிய கேள்விக்கு செய்தியாளர்களிடம் தைரியமான பதிலை வெளிப்படுத்தினார்.

rohit sharma - ritika sajdeh

ஓய்வு குறித்து பேசியிருந்த அவர், “ஒருநாள் காலையில் நான் கண் விழிக்கும்போது நான் எதற்கும் போதுமானவனாக இல்லாமலும், இனிமேல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் எனக்கு தோன்றினால், நான் அந்த கனமே என்னுடைய ஓய்வை அறிவிப்பேன்” என்றும், “ஆனால் உண்மையில் நான் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக சிறந்த கிரிக்கெட்டை விளையாடிவருகிறேன்” என்று நம்பிக்கையுடன் பேசியிருந்தார்.

ரோகித் சர்மா சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக வேண்டும்!

மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ஒரு வெற்றிக்கேப்டன், அதே அணியில் ஒரு வீரராக விளையாடுவாரா? விளையாட முடியுமா? விளையாட வேண்டுமா? என்ற கேள்வி ரசிகர்களுக்கே எழும்போது, ரோகித் சர்மா என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.

Dhoni and Rohit Sharma

இந்நிலையில்தான் ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரவேண்டும் என்றும், தோனி ஓய்வை அறிவித்தால் ரோகித் CSKவை அடுத்த 4 வருடங்களுக்கு வழிநடத்தவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார் அம்பத்தி ராயுடு. சமீபத்தில் எம்எஸ் தோனி 2024 ஐபிஎல் தொடரில் புதிய ரோலில் விளையாடவிருப்பதாக கூறிய நிலையில், அம்பத்தி ராயுடுவின் கருத்தை பெரும்பாலான ரசிகரகள் வரவேற்றுள்ளனர்.

rayudu - rohit

ரோகித் சர்மா குறித்து நியூஸ்24 யூ-டியூப் சேனலில் பேசியிருக்கும் அம்பத்தி ராயுடு, “ரோகித் சர்மா அடுத்த 5-6 ஆண்டுகளுக்கு ஐபிஎல் விளையாட முடியும். அவர் கேப்டனாக விரும்பினால், அவருக்கு உலகம் முழுவதும் திறந்திருக்கும். அவர் எங்கு வேண்டுமானாலும் எளிதாக கேப்டனாக செயல்பட முடியும். என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா 2025-ல் சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எம்எஸ் தோனி ஓய்வு பெற்றால் அதற்கு பிறகு ரோகித் சர்மா சென்னை அணியை தலைமை தாங்கி வழிநடத்தவேண்டும்" என்று ராயுடு கூறியுள்ளார்.

ரோகித் சர்மா மற்றும் அம்பத்தி ராயுடு இருவரும் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடியவர்கள் என்பதும், ஐபிஎல் தொடரில் அதிகமுறை (6) கோப்பைகள் வென்ற இரண்டே வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.