சச்சின், ஜத்ரான், ஜடேஜா ட்விட்டர்
கிரிக்கெட்

’சச்சினின் புத்தகத்தைப் படித்த இப்ராஹிம் ஜத்ரான்’- ஆப்கான் அணிக்கு சொன்னதை செய்துகாட்டிய அஜய் ஜடேஜா!

ஆப்கானிஸ்தான் அணி குறித்து அவ்வணியின் ஆலோசகரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான அஜய் ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார்.

Prakash J

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாகச் செயல்பட்டது. குறிப்பாக, முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளை பொளந்து கட்டி அபார வெற்றியை பெற்றது. மேலும் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தையும் தக்கவைத்ததுடன், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தகுதிபெற்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாகச் செயல்பட்டதற்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவும் முக்கிய காரணம். ஏனென்றால் இந்த உலகக்கோப்பை தொடரில் அஜய் ஜடேஜா ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராகச் செயல்பட்டார்.

இப்ராஹிம் ஜத்ரான்

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து அஜய் ஜடேஜா கருத்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர், ”உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியுடன் பணியாற்றிய அனுபவம் மிகச்சிறப்பாக இருந்தது. தாம் விளையாண்ட காலத்தில் பாகிஸ்தான் அணி எப்படி இருந்ததோ, அப்படிதான் இப்போது ஆப்கானிஸ்தான் அணி இருக்கிறது.

அணியில் உள்ள வீரர்களுக்குள் எந்த ஒளிவுமறைவும் இல்லை. எந்தக் கருத்தையும் வெளிப்படையாகக் கூறுகிறார்கள். ஆப்கானிஸ்தான் அணி வீரர்களில் மிகவும் வித்தியாசமான வீரர் இப்ராஹிம் ஜத்ரான். அவருக்கு தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்.

ஒருமுறை, ஜத்ரான் சச்சின் டெண்டுல்கர் தொடர்பான புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம், ’சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்து அழைத்து வர முயற்சிக்கிறேன்’ என்று கூறினேன்.

அதேபோல் ஜானத்தன் ட்ராட் மிகச்சிறந்த பயிற்சியாளர். டைமிங், ஒழுக்கம், கட்டுப்பாடு என்று அனைத்திலும் தீவிரமாக இருப்பவர். அவர் கிரிக்கெட் களத்தைவிட்டு சிலகாலம் வெளியில் இருந்தாலும், தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு பயற்சியளிக்க ஜாம்பவான் வீரர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் ஜானத்தன் ட்ராட் பொறுப்பேற்றுச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். நிச்சயம் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு அவரும் முக்கியக் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

அஜய் ஜடேஜா

அஜய் ஜடேஜா சொன்னதைப்போலவே மும்பை மைதானத்தில் நடந்த போட்டியின்போது சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்து ஆப்கானிஸ்தான் வீரர்களை சந்திக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.