போட்டி 4: தென்னாப்பிரிக்கா vs இலங்கை
போட்டி முடிவு: 102 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி
ஆட்ட நாயகன்: எய்டன் மார்க்ரம் (தென்னாப்பிரிக்கா)
பேட்டிங்: 54 பந்துகளில் 106 ரன்கள் (14 ஃபோர்கள், 3 சிக்ஸர்கள்)
"அதிவேக உலகக் கோப்பை சதம் அடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் எப்போதாவது தான் நடக்கும். இன்று நடந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பேட்ஸ்மேனாக என் மீதான எதிர்பார்ப்பு என்ன என்பது எனக்குத் தெரியும். பாசிடிவாகவும் சாமர்த்தியமாகவும் விளையாட முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம். கடந்த 12 மாதங்களாக எல்லாம் சரியாக நடந்துவருவது நல்ல விஷயம். ஆரம்பத்தில் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று கணித்துவிட்டு அதன்பிறகு முடிவுகளைப் பற்றி யோசிக்காமல் சில முயற்சிகள் செய்யவேண்டும் என்று யோசித்திருந்தேன். ஆடுகளம் ஓரளவு சாதகமாக இருந்தது"எய்டன் மார்க்ரம்
இலங்கைக்கு எதிரான போட்டியை எய்டன் மார்க்ரம் தனி ஆளாக வென்று தந்திடவில்லை. அவர் ஆடிய இன்னிங்ஸ் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடவில்லை. அப்படி இருக்கும்போது 3 வீரர்கள் சதம் அடித்திருக்கும் நிலையில், மார்க்ரமின் செயல்பாடு தனித்துத் தெரிந்தது ஏன்? ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கொடுக்கப்பட்டது ஏன்? ரன் மழை பொழிந்த இந்தப் போட்டியில் மார்க்ரம் ஆடிய இன்னிங்ஸ் நிச்சயம் பெரும் தாக்கம் ஏற்படுத்தியது. ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்து படைத்தது. உலகக் கோப்பை அரங்கில் ஒரு பெரும் சாதனையும் படைத்திருக்கிறது.
மார்க்ரம் களமிறங்கியபோது தென்னாப்பிரிக்க அணி மிகவும் வலுவான நிலையில் இருந்தது. ஏற்கெனவே டி காக் சதமடித்து வெளியேறியிருந்தார். களத்தில் இருந்த ரஸி வேன் டெர் டுசனும் 96 ரன்கள் எடுத்திருந்தார். 30.4 ஓவர்களில் 215 ரன்கள் குவித்திருந்தது அந்த அணி. ரன்ரேட் 6.93 என மிரட்டியது. அப்போதே தென்னாப்பிரிக்கா 400 ரன்களைக் கடக்குமா என்ற பேச்சு தொடங்கியிருந்தது. அந்த சூழ்நிலையில் மார்க்ரம் களமிறங்கியதைக் கூட சிலர் கேள்வியெழுப்பினர். ஏனெனில் அட்டகாச ஃபார்மில் இருக்கும் கிளாசன், மில்லர் போன்றவர்கள் களமிறங்கியிருந்தால் ரன்ரேட் இன்னும் சிறப்பாகியிருக்கும் என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் மார்க்ரம் ஒரு பாடமே புகட்டினார்.
தன் வழக்கமான பாணியில் தான் இன்னிங்ஸைத் தொடங்கினார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன். முதல் 9 பந்துகளில் 5 ரன்கள் தான் அடித்திருந்தார். ஆனால் அதன்பிறகு தொடர்ந்து 4 பந்துகளை ஃபோருக்கு அனுப்பினார் அவர். ஷனகா வீசிய 33வது ஓவரின் கடைசிப் பந்தில் பௌண்டரி அடித்தவர், மதுஷன்கா வீசிய அடுத்த ஓவரில் ஹாட்ரிக் ஃபோர்கள் விளாசினார். டி காக் - டுசன் ஆடியபோது காட்டிய ரன்ரேட்டை விட மார்க்ரம் வந்ததும் ரன்ரேட் படபடவென அதிகரித்தது. வெல்லலாகே, பதிரான என புதிய ஸ்பெல்கள் வீச வந்த ஒவ்வொரு பௌலரின் ஓவரில் ஃபோர்கள் அடித்துக்கொண்டே இருந்தார் மார்க்ரம். 33 பந்துகளில் அரைசதம் கடந்த மார்க்ரமுக்கு இதுவே முதல் உலகக் கோப்பை அரைசதமாக அமைந்தது.
கிளாசன் ஒருபக்கம் தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மார்க்ரமோ கிளாசனை விட வேகமாக ஆடினார். பதிரானா வீசிய 43வது ஓவரில் 3 ஃபோர்களும், 1 சிக்ஸரும் விளாசினார் அவர். பதிரானா வைடின் மூலம் ஒரு ஃபோரும் கொடுக்க, அந்த ஓவரில் 26 ரன்கள் எடுக்கப்பட்டது. ரன்ரேட் 8 ரன்களை நெருங்கிக்கொண்டிருந்தபோது கிளாசன் வெளியேறினார். இருந்தாலும் மார்க்ரம் தன் வேகத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை. கிளாசன் அவுட்டான ஓவரிலேயே சிக்ஸர் விளாசினார் அவர். மதுஷன்கா வீசிய 46வது ஓவரில் அடுத்தடுத்து ஃபோரும், சிக்ஸரும் விளாசி தன் சதத்தை நிறைவு செய்தார் மார்க்ரம்.
49 பந்துகளில் சதமடித்து உலகக் கோப்பையின் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் அவர். அதற்கு முன் அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரயன் 2011 உலகக் கோப்பையில் (இங்கிலாந்துக்கு எதிராக) 50 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது. மார்க்ரமின் சதம் மூலம் தென்னாப்பிரிக்க அணியும் ஒரு சாதனை படைத்தது. டி காக், வேன் டெர் டுசன் ஆகியோரும் சதமடித்திருக்க, ஒரே உலகக் கோப்பை போட்டியில் 3 வீரர்கள் சதமடித்த சாதனையைப் படைத்தது அந்த அணி.
தென்னாப்பிரிக்க அணி 383 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆகி வெளியேறினார் மார்க்ரம். 54 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார் அவர்.