மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரானதால் தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவரானார் ருதுராஜ் கெய்க்வாட். ஒரு ஐ.பி.எல். தொடரின்போது சி.எஸ்.கே. கேப்டனான மகேந்திர சிங் தோனியிடம், ருதுராஜ் கெய்க்வாட் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இளம் வீரர்கள் மத்தியில் துடிப்பு இல்லை எனக் கூறிய தோனியே, தனது கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் இடம் கொடுத்திருக்கிறார்.
அந்த நம்பிக்கையை உருவாக்கும் வகையிலேயே கடந்த 3 ஐ.பி.எல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் ருதுராஜ் கெய்க்வாட். அது மட்டுமின்றி இந்திய அணியில் கிடைத்த வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தி வந்த ருதுராஜ், ஆசியப் போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்கு தங்கம் வென்று கொடுத்தார்.
அண்மையில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரிலும் 3 போட்டிகளில் களமிறங்கி 133 ரன்கள் விளாசி நல்ல ஃபார்மில் இருக்கும் நேரத்தில், இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் அவருக்கு இடமளிக்கப்படாதது சர்ச்சையை எழுப்பியது.
எக்ஸ் வலைத்தளத்தில் ருதுராஜ் கெய்க்வாட்க்கு இடமளிக்காதது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் ரசிகர்கள், நேரடியாக பிசிசிஐ- தேர்வுக்குழுவை விமர்சித்து எழுதி வருகின்றனர்.
புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கௌதம் கம்பீரின் நடவடிக்கை இது என்றும் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதுபோன்ற விமர்சனங்களை WE WANT RUTHU BACK என்ற ஹேஷ்டேக் மூலம் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசியபோது, ருதுராஜ்க்கு வாய்ப்பு அளிக்காதது பெரும் தவறு எனத் தெரிவித்திருக்கிறார். சுப்மன் கில்லிடம் டி20க்கு தேவையான ஆக்ரோஷம் கிடையாது, அதுவும் துணை கேப்டன் பதவி கொடுப்பது தவறான முடிவு, அந்த இடத்திற்கு ருதுராஜ் சரியான தேர்வாக இருப்பார் என்றும் கூறியிருக்கிறார்.
அதேபோல், ஐ.பி.எல். மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மாவும் இலங்கை தொடரில் இடம் பெறவில்லை. இதற்கும் இணைய ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் ஒரு தொடரில் 15 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால், உள்ளூர், வெளியூர் என மைதான தன்மைக்கு ஏற்றார்போல் வீரர்களை எடுப்பதை பிசிசிஐ வழக்கமாக கொண்டிருக்கும். ஐ.பி.எல். காரணமாக ஏராளமான வீரர்கள் உருவாகியுள்ளனர். அனைவரையும் ஒரே தொடரில் எடுக்க முடியாது என்பதால் ஒவ்வொரு தொடரிலும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ருதுராஜ் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் என்பது அனைவரும் கண்கூடாக பார்த்ததே, இதனை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவும் அறிந்திருக்கும் என நம்பலாம். எனவே, எதிர்வரும் தொடர்களில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.