NZ vs PAK Cricbuzz
கிரிக்கெட்

அடுத்தடுத்து 7 தோல்வி; பாபர் அசாமிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்ட பின்னும் தொடரும் சோகம்!

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்புவரை, உலகத்தின் நம்பர் 1 அணியாக பாகிஸ்தான் அணி உச்சத்தில் இருந்தது. அந்த அணி டெஸ்ட் போட்டிகளில் சிறந்த செயல்திறன், நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டிரா, இலங்கைக்கு எதிராக 2-0 என்று வெற்றி பெற்றது என தொடர்ச்சியாக ஏறுமுகத்தையே கண்டிருந்தது. இதனால் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியே 2023 ஒருநாள் உலகக்கோப்பை வெல்லும் என்று எல்லோராலும் கூறப்பட்டது.

ஆனால், உலகக்கோப்பைக்கு முன்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 1-2 என இழந்த பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பையின் 9 லீக் போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றிபெற்று அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. இந்த தோல்வியின் எதிரொலியாக முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் சேர்ந்து பாபர் அசாமின் கேப்டன்சியை மோசமாக விமர்சனம் செய்தனர்.

3 மாதத்திற்கு முன்புவரை உலகத்தின் நம்பர் 1 அணியாக இருந்த பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பையின் தோல்விக்கு பிறகு முழுவதுமாக கலைக்கப்பட்டது. அதிகப்படியான விமர்சனத்தால் தன்னுடைய கேப்டன் பதவியை பாபர் அசாம் ராஜினாமா செய்தார். தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் இயக்குநராக இருந்த மிக்கி ஆர்தர், பயிற்சியாளர்களாக இருந்த பிராட்பர்ன் மற்றும் ஆண்ட்ரூ புட்டிக் மூன்று பேரின் பதவிகள் பறிக்கப்பட்டு NCA அதிகாரிகளாக பணிமாற்றம் செய்யப்பட்டன.

இரண்டு புதிய கேப்டன்கள்! புதிய பயிற்சியாளர்கள் அறிவிப்பு!

பாபர் அசாம் கேப்டன் பதவி நீக்கத்திற்கு பிறகு பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷாஹீன் அப்ரிடியும், டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானின் புதிய கிரிக்கெட் இயக்குநர் மற்றும் தலைமை பயிற்சியாளராக முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபீஷ், பேட்டிங் பயிற்சியாளராக ஆடம் ஹோலியோக் முதலியோர் நியமிக்கப்பட்டனர்.

Babar Azam

உடன் வேகப்பந்து மற்றும் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக முன்னாள் வீரர்கள் உமர் குல் மற்றும் சயீத் அஜ்மல் ஆகியோரை நியமித்து அதிரடி உத்தரவிட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

புதிய கேப்டன்கள் மாற்றம்! 7-0 என தொடர் தோல்வி!

பாபர் அசாம் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி ஒரு வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். இந்நிலையில் புதிய கேப்டன்கள் நியமனத்திற்கு பிறகு ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. அந்த 3 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, 3-0 என தோல்வியுற்று தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. தொடருக்கு பிறகு பேசிய பல ஆஸ்திரேலிய வீரர்கள், முன்பிருந்த இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் போல் தற்போது பாகிஸ்தான் அணியில் பார்க்கமுடியவில்லை என கருத்துதெரிவித்திருந்தனர்.

Shaheen Afridi

3-0 என டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், நியூசிலாந்துக்கு சென்ற ஷாஹீன் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதல் நான்கு போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் பாகிஸ்தான் அணி, 4-0 என தோல்வியுடன் பயணித்துவருகிறது.

nz vs pak

இன்று நடைபெற்ற 4வது போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான், ரிஸ்வானின் 90 ரன்கள் பேட்டிங்கால் 158 ரன்கள் அடித்தது. உடன் விளையாடிய நியூசிலாந்து அணியில் சிறப்பாக செயல்பட்ட டேரில் மிட்சல் (72 ரன்கள்) மற்றும் க்ளென் பிலிப்ஸ் (70 ரன்கள்) இருவரும் சேர்ந்து நியூசிலாந்தை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 5வது போட்டி வரும் ஞாயிற்று கிழமை நடக்கவிருக்கிறது.