இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது இலங்கை அணி.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. நடந்துமுடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய பதும் நிசாங்காவின் அதிரடியால், இலங்கை அணி வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் அவிஸ்கா இருவரும் விரைவாகவே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால் அடுத்துவந்த வீரர்கள் அனைவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை எடுத்துவந்தனர். குசால் மெண்டீஸ் 61, சமரவிக்ரம 52 மற்றும் ஜனித் 50 ரன்கள் என மூன்று வீரர்கள் அரைசதம் அடித்து அசத்த, இறுதிவரை களத்தில் நின்ற அசலங்கா சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
சதமடிக்கும் வாய்ப்பை இழந்த அசலங்கா 97 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 308 ரன்கள் குவித்து அசத்தியது.
கடந்த போட்டியில் இலங்கை அணி 381 ரன்கள் குவித்தபோதும் இறுதிவரை போராடிய ஆப்கானிஸ்தான் அணி, ஓமர்சாய் 149 ரன்கள் மற்றும் முகமது நபி 136 ரன்கள் ஆட்டத்தால் பரபரப்பான இறுதிகட்டத்தை அடைந்தது. ஆனால் முடிவில் 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இரண்டாவது போட்டியிலும் சிறப்பான பேட்டிங்கை ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தியது. இப்ராஹின் ஜத்ரான் மற்றும் ரஹ்மத் ஷா இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்த, 2வது விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப் 97 ரன்களுக்கு சென்றது. 29 ஓவர் முடிவில் 143/2 ரன்கள் என்ற நல்ல நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி, இந்த போட்டியிலும் இறுதிவரை போராடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தையே அடுத்த 3 ஓவரில் தலைகீழாக திருப்பினார் இலங்கையின் மிஸ்டிரி ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா.
143/2 என்ற நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியை ரஹ்மத் ஷாவை 63 ரன்களில் வெளியேற்றிய ஹசரங்கா, அடுத்தடுத்து வந்த கேப்டன் ஷாஹிதி, முகமது நபி மற்றும் குல்பதின் நைப் என அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்த, அடுத்த 10 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது ஆப்கானிஸ்தான் அணி.
ஹசரங்கா 4 விக்கெட்டுகள் மற்றும் மதுஷங்கா 2 விக்கெட்டுகள் என அடுத்தடுத்து வீழ்த்த 143/2 என இருந்த ஆப்கானிஸ்தான், 153 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 வீழ்த்தி வென்றுள்ளது இலங்கை அணி.