eng vs afg EspnCricinfo
கிரிக்கெட்

உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்! சுழலில் சுருண்டது சாம்பியன்!

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்தை சுழலில் சுருட்டி வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

Rishan Vengai

அடுத்தடுத்த இரண்டு தோல்விகளுடன் ஆப்கானிஸ்தான் அணியும், ஒரு தோல்வி வெற்றியுடன் இங்கிலாந்து அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தின. தங்களுடைய முதல் வெற்றியைத் தேடி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, டிஃபண்டிங் சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு ஒரு மறக்கமுடியாத உலகக்கோப்பை தோல்வியை பரிசளித்துள்ளது.

இங்கிலாந்தை வெளுத்துவாங்கிய குர்பாஸ்!

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வுசெய்ய, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் ஓப்பனர்கள் ஏன் பந்துவீச்சை எடுத்தோம் என இங்கிலாந்தை பும்பவிட்டனர். தரமான ஃபார்மில் இருக்கும் ரஹமனுல்லா குர்பாஸ் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஆரம்பம் முதலே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய குர்பாஸ் சிக்சர், பவுண்டரிகளாக பறக்கவிட்டு சாம் கர்ரனின் ஒரே ஓவரில் 20 ரன்களை எடுத்துவந்தார். தொடர்ந்து மார்க் வுட், அதில் ரஷித் என யார் போட்டாலும் சிக்சர்களாக பறக்கவிட்ட அவர் அரைசதம் அடித்து அசத்தினார்.

Gurbaz

ஒருபுறம் இப்ராஹின் குறைவான பந்துகளையே சந்தித்தாலும், அதிகமான ஸ்டிரைக்குகளை எடுத்த குர்பாஸ் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டினார். முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்களை குவித்த இந்த ஜோடி, ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் அதிகபட்ச பவர்ப்ளே ரன்களை எடுத்துவந்தனர். தொடர்ந்து அட்டாக்கிங் கேமை நிறுத்தாத குர்பாஸ் சதமடிப்பார் என நினைத்த போது துரதிருஷ்டவசமாக 80 ரன்னில் ரன்னவுட்டாகி வெளியேறினார். பின்னர் தொடர்ந்து வந்த அனைத்து வீரர்களும் பங்களிப்பு போட 284 ரன்கள் குவித்தது ஆப்கானிஸ்தான் அணி.

இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்!

இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மைதானம் என்பதால் எளிதாக சேஸ் விடலாம் என களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, அதிரடி வீரரான ஜானி பேர்ஸ்டோவை 2 ரன்னில் வெளியேற்றிய ஃபரூக் அதிர்ச்சிகொடுத்தார். பின்னர் பந்துவீச வந்த ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்கள் இங்கிலாந்தை கலக்கி போட்டனர். நவீன கால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட்டிற்கு எதிராக, ஒரு அசத்தலான ஸ்பெல்லை வீசிய முஜீப், ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி செட் செய்துவிட்டு திடீரென ஒரு லெந்த் பந்தை வீசி போல்டாக்கி வெளியேற்றினார். தொடர்ந்து பந்துவீச வந்த முகமது நபி சிறப்பாக விளையாடிய டேவிட் மாலனை 32 ரன்னில் வெளியேற்ற ஆட்டம் சூடுபிடித்தது.

Butler

68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என மாற களத்திற்கு வந்த கேப்டன் ஜோஸ் பட்லரை போல்டாக்கி 9 ரன்னில் வெளியேற்றினார் நவீன் உல் ஹக். அடுத்தடுத்து ரசீத் கான், நபி, முஜிப் என மூன்று ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களும் ரிதமிற்கு வர, தொடர்ச்சியாக 6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி தடுமாறியது. என்ன தான் விக்கெட்டுகள் விழுந்தாலும் களத்தில் நம்பிக்கையளிக்கும் விதமாக விளையாடிய ஹாரி ப்ரூக் அரைசதம் அடித்து அசத்தினார். விரைவில் ப்ரூக்கை வெளியேற்றினால் இந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தும் வாய்ப்பு ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும் என எதிப்பார்க்கப்பட்ட நிலையில், சிறப்பாக பந்துவீசிய முஜிப் 66 ரன்னில் அவரை வெளியேற்றினார்.

eng vs afg

பின்னர் என்னதான் டெய்ல் எண்டர்கள் பவுண்டரிகளாக விரட்டினாலும் ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை. 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தங்களுடைய இரண்டாவது உலகக்கோப்பை வெற்றியை பதிவுசெய்து அசத்தியுள்ளது.