ஆப்கானிஸ்தான் ICC
கிரிக்கெட்

ஆஸி உடனான தோல்விக்கு பிறகும் ஆப்கானுக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கா? அதுக்கு இப்படி நடக்கணும்!

ஆஸ்திரேலியா உடனான இதயம் உடைக்கும் தோல்விக்கு பிறகும் ஆப்கானிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் வாய்ப்பு இருக்கிறது.

Rishan Vengai

நடப்பு 2023 உலகக்கோப்பையில் ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 8 போட்டிகளில் 4 ஆட்டங்களில் வெற்றிபெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் நீடிக்கிறது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா மூன்று அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் நிலையில், 4வது இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மூன்று அணிகளுக்கும் இடையே பலத்த போட்டி நிலவிவருகிறது. 8 புள்ளிகளுடன் ஒரே நிலைமையில் இருக்கும் மூன்று அணிகளும் நெட் ரன்ரேட் வித்தியாசத்துடன் மட்டுமே உள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியா உடனான 3 விக்கெட் தோல்விக்கு பிறகும் ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதி செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

அரையிறுதிக்கு செல்ல ஆப்கானிஸ்தானுக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 8 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில் நீடிக்கின்றன. இதில் 4வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து +0.861 நெட் ரன்ரேட்டிலும், பாகிஸ்தான் +0.036 ரன்ரேட்டிலும், ஆப்கானிஸ்தான் -0.338 ரன்ரேட்டிலும் இருக்கின்றன. இந்நிலையில் கடைசி லீக் போட்டிகளில் நியூசிலாந்து இலங்கைக்கு எதிராகவும், பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிராகவும், ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராகவும் விளையாடவிருக்கின்றன.

Afg

ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளோடு தோற்க வேண்டும். ஒருவேளை இரண்டு அணிகளில் ஒன்று வெற்றிபெற்றாலும் ஆப்கானிஸ்தான் அணி முன்னேறுவதற்கு நெட் ரன்ரேட் பொறுத்த வெற்றியே தேவைப்படும். கடைசி லீக் போட்டிகளை பொறுத்தே ஆப்கானிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சாம்பியன் அணிகளை வீழ்த்தியிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தும் வல்லமையும் கொண்டுள்ளது.

ரன்ரேட் வித்தியாசத்தில் அரையிறுதிக்கு செல்ல முடியுமா?

கடந்த ஆசிய கோப்பையின் போதும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த சவாலே இருந்தது. இலங்கைக்கு எதிராக 38 ஓவர்களில் 291 ரன்கள் எட்டவேண்டும் என்று இருந்த நிலையில் கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றே விட்டது. ஆனால் கடைசிநேர விதிமுறை குழப்பங்களால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Afg VS SL

ஒருவேளை உலகக்கோப்பையிலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு அந்த நிலைமை ஏற்பட்டால், நிச்சயம் இந்த உலகக்கோப்பை இன்னுமொரு தரமான போட்டியை காணவிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.